வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 26 மார்ச் 2015 (16:53 IST)

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இடைக்கால தடை

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



 


 
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை எதிர்த்து வைகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், 'நியூட்ரினோ ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், நீர், நிலம், காற்று ஆகியவை பாதிக்கப்பட்டு இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்' என்றும், 'இதனால் இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள அணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும்' என்றும் வைகோ தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம், நியூட்ரினோ ஆய்வுமையத்திட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
 
அணுவைவிட மிகச் சிறிய துகளான நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்ய, நீலகிரி மலையில் 'இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி மையம்' (ஐ.என்.ஓ.) அமைக்க திட்டமிடப்பட்டது.
 
ஆனால், இத்திட்டத்தால் நீலகிரியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்ததால், தேனி மாவட்டம் போடி மலைப் பகுதியில் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
 
அதன்படி, தேனியில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
 
இதற்கு மதிமுக உள்ளிட்ட பலவேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.