வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 2 ஜூலை 2015 (02:08 IST)

ஆம்பூர் வன்முறைக்கு அஸ்லாம் பாஷா காரணம் அல்ல: ஜவாஹிருல்லா

ஆம்பூர் வன்முறைக்கு அஸ்லாம் பாஷா காரணம் அல்ல என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
வேலூர் மாவட்டம், ஆம்பூரில் நடந்த கலவரத்தை தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான எம்.எச். ஜவாஹிருல்லா ஆம்பூருக்கு நேரில் சென்று கலவரம் நடந்த பகுதியை பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் நடந்த உண்மை குறித்து நேரில் கேட்டறிந்தார்.
 
அப்போது, ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில், ஆம்பூரில் வன்முறை சம்பவம் நடந்துள்ளது. இது, சில விஷமிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும். இந்த வன்முறை சம்பவத்திற்கு எந்த அமைப்புகளும் காரணம் இல்லை.
 
இந்த வன்முறை சம்பவம் நடப்பதற்கு முன்பே தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்யவில்லை. ஆம்பூரை சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. வெளியூரை சேர்ந்த விஷமிகள் சிலர் தான் ஈடுபட்டுள்ளனர்.
 
வன்முறை சம்பவத்திற்கு அஸ்லாம் பாஷா எம்.எல்.ஏ.-தான் முக்கிய காரணம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தவறான கருத்தாகும். அவரது கருத்து கண்டனத்துக்குரியது. அவர் மீது சட்ட பூர்வமாக அவதூறு வழக்கு தொடருவோம்.
 
காவல்துறை ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, இதனை வரவேற்கிறோம். இறந்த ஷமில் அகமது குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரண உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும். வன்முறை சம்பவத்தை தொடர்ந்து 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை கைது செய்துள்ளதில், பெரும்பாலானவர்கள் அப்பாவிகள் ஆவர். எனவே, உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றார்.