செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2017 (11:32 IST)

மோடி மீது நடிகை கௌதமி ஆவேசம்: ஜெ. மரணம் குறித்த என் கேள்விக்கு பதில் இல்லை!

மோடி மீது நடிகை கௌதமி ஆவேசம்: ஜெ. மரணம் குறித்த என் கேள்விக்கு பதில் இல்லை!

நடிகை கௌதமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இன்று வரை அந்த கடிதத்துக்கு பதில் இல்லை.


 
 
இந்நிலையில் நடிகை கௌதமியின் கடிதம் பிரதமருக்கு செல்லவில்லை என்ற தகவல் நேற்று வெளியானது. இந்நிலையில் நடிகை கௌதமி நேற்று அவரது வலைதளத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு குழப்பங்கள், சந்தேகங்கள் உள்ளதை சுட்டிக்காட்டி கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினேன். இது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரபரப்பாக பகிரப்பட்டது.
 
பிரதமர் மோடி மற்ற தலைவர்களை விட சமூக வலைத் தளங்களை கையாள்வதில் எடுத்துக்காட்டாய் திகழ்கிறார். அவருக்கு நான் எழுதிய கடிதம் ஊடகங்கள் வழியாகவும் நேரடியாகவும் சென்ற பின்னரும் இதுவரை எந்த பதிலும் தரவில்லை.

 
இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவள் என்ற முறையில் ஜனநாயக வழியில் ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்ட வலி மற்றும் சந்தேகத்தை பிரதமருக்குத் தெரியப்படுத்தினேன். பல லட்சம் மக்களுக்குத் சென்று சேர்ந்த அந்த கடிதம், பிரதமரின் பார்வைக்கே போகவில்லை என்பது மக்களாகிய நம்மை கொள்ளையடிப்பதற்கு சமம்.
 
நாட்டில் உள்ள அனைத்து பிரஜையும் பிரதமருக்கு முன் சமம் என்றால் என்னுடைய கேள்வியை பிரதமர் ஏன் புறக்கணிக்கிறார்? தமிழகம் அனைத்துத் துறைகளிலும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பலரும் அவரது உடல்நலம் விசாரிக்க நேரில் போய்ப் பார்த்தனர்.
 
ஆனால் ஒருவர் கூட அவரது உடல் நிலை பற்றிய உண்மையைத் தெரிவிக்கவில்லை. தமிழக மக்களின் கேள்விகளுக்கு பதில் தர மறுப்பதும், ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி மறுப்பதும் தமிழக மக்களுக்கு மறுக்கப்படும் நீதியாகும். ஜெயலலிதா மறைவு, வர்தா புயல் போன்றவற்றால் தமிழக மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.
 
பெரும் போராட்டத்தை நடத்தி தமிழக மக்கள் தங்கள் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டை மீட்டெடுத்துள்ளனர். அரசு செவி சாய்க்காததால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இப்படியான துயரங்களுக்கு பின்னராவது மத்திய அரசிடம் இருந்து ஆறுதலான செய்தி வரும் என எதிர்பார்த்தோம்.
 
ஒருவரது கேள்விக்கு பதில் அளிக்க கால தாமதம் ஆகலாம். ஆனால் பதிலே கிடைக்காமல் இருந்தால் அவருக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றுதானே அர்த்தம். பொறுப்பிலிருந்த ஒரு முதல்வர் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அவரது மரணம் குறித்த தகவல்களை ஒளிவு மறைவு இன்றி வெளியிட வேண்டும். இதற்காகவும் தெருவில் இறங்கி போராடவா வேண்டும் என்றார் கௌதமி ஆவேசமாக.