வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2015 (22:40 IST)

ஏழை நெசவாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகை அரசு வழங்க வேண்டும்

கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள போனஸ் பெறாத ஏழை நெசாளர்களுக்கு சேர வேண்டிய போனஸ் தொகை உடனே கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என தமிழக காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கூட்டுறவுத்துறையில் சாதனை படைத்து, முன்னோடி மாநிலமாக தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்த காலம் தலைகீழாக மாறி கூட்டுறவுத்துறை என்றாலே கூட்டுக் கொள்ளை என்கிற அவப்பெயரை பெருகிற நிலை இன்றைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டுள்ளது.
 
ஆளுங்கட்சியினரின் தலையீட்டின் காரணமாக பல கூட்டுறவு சங்கங்கள் திவாலாக வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக நொடிப்பு நிலைக்கு கூட்டுறவுத்துறை தள்ளப்பட்டுள்ளது.
 
கூட்டுறவுத்துறையில் பணியாற்றுகிற பணியாளர்களுக்கு எத்தகைய பாதுகாப்பும் இல்லாத நிலை இருந்து வருகிறது. போனஸ் சட்டத்தின்படி 8.33 சதவீதத்தோடு கருணைத் தொகை வழங்குவது அரசின் அடிப்படை கடமையாகும். இதைப் பெறுவது கூட்டுறவுப் பணியாளர்களின் உரிமையாகும். இதை ஒரு சலுகையாக அரசு கருத முடியாது. சமீபத்தில் தமிழகத்திலுள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சம்மேளனம், அரசு ரப்பர் நிறுவனம், தமிழ்நாடு தேயிலை நிறுவனம் ஆகியவற்றுக்கு தமிழக அரசு 8.33 சதவீதம் போனஸ் வழங்கியிருக்கிறது.
 
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கைத்தறி துறையில் புகழ் பெற்று விளங்கும் சென்னிமலை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் கடந்த 1.4.2014 ஆம் தேதி முதல் 31.3.2015 ஆம் தேதி வரை உள்ள காலத்திற்கு உண்டான வரவு-செலவு கணக்குகள் முடிக்கப்பட்டு 8 மாதங்களாகியும் லாபத் தொகையை நெசவாளர்களுக்கு முறையாக பங்கிட்டு தரப்படவில்லை. தீபாவளி பண்டிகை முடிந்தும் நெசவாளர்களுக்கு உரிய போனஸ் தொகை வழங்கப்படவில்லை.
 
பொதுவாக தீபாவளிக்கு முன்பாக நெசவாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால் தீபாவளி பண்டிகை முடிந்தும் போனஸ் வழங்காமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் சென்னிமலை வட்டாரப் பகுதிகளில் உள்ள கைத்தறி நெசவாளர் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஆண்டு முழுவதும் உழைத்த உழைப்பிற்கு கிடைக்க வேண்டிய போனஸ் தொகை கிடைக்காமல் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
 
தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிற சூழலில் சென்னிலை கைத்தறி நெசவாளர்கள் மட்டும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிற நிலை ஏற்படாததற்கு தமிழக அரசுதான் பொறுப்பாகும்.

எனவே, கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள போனஸ் பெறாத ஏழை நெசாளர்களுக்கு சேர வேண்டிய போனஸ் தொகை உடனே கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.