செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 15 டிசம்பர் 2014 (17:27 IST)

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முதல்வர்? - அரசுத் தேர்வில் ஜெயலலிதா குறித்த கேள்வி

இந்தியாவில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்தவர் யார் என்று ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
 
ரயில்வே துறை சார்பில் காலியாக இருந்த ஜூனியர் என்ஜினியர் பதவிக்கான தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  மொத்தம் 21 மண்டலங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
 
சென்னை மண்டலத்தில் நடந்த தேர்வின் வினாத்தாளில் முன்னாள் முதல்வரு அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குறித்துக் கேள்விக் கேட்கப்பட்டுள்ளது. அந்தக் கேள்வியில்,
 
முதன் முதலில் இந்தியாவில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்தவர் யார்?
(அ). லாலு பிரசாத் யாதவ், (ஆ). ஜெகன்னாத் மிஸ்ரா, (இ). ஜெ. ஜெயலலிதா, (ஈ). எடியூரப்பா.
 
இந்த கேள்வி குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன், ரயில்வே துறை தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ளது.
 

 
இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த கேள்வியை உடனடியாக நீக்க வேண்டும் என்றார். மேலும் இந்த விவகாரம் குறித்து பேச அனுமதி அளிக்குமாறு அதிமுக எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக பதிலளித்த அருண் ஜெட்லி, ’இவ்விஷயம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும்’ என உறுதியளித்தார்.
 
ஜெயலலிதா முதல்முறையாக முதல்வர் பதவி வகித்த 1991-1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகால சிறை தண்டனையையும், 100 கோடி அபராதத் தொகையையும் தண்டனையாக விதித்தது குறிப்பிடத்தக்கது.