வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 1 ஜூன் 2015 (17:26 IST)

”மாணவர்களின் கருத்துரிமையை காலில் போட்டு மிதிக்கும் நடவடிக்கை” - ஐஐடி விவகாரம் குறித்து கருணாநிதி

மாணவர்களின் கருத்துரிமையினைக் காலில் போட்டு மிதிப்பதற்கு சமமான இந்த நடவடிக்கை என்று ஐஐடி விவகாரம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் உள்ள “அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம்“ என்ற மாணவர்கள் அமைப்பு குறித்து, யாரோ ஒருவர்அனுப்பிய அநாமதேய – “மொட்டைக் கடிதத்தின்“ காரணமாக, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை, இயற்கை நீதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்டோரிடம் எந்தவித விளக்கத்தையும் கேட்டுப் பெறாமல், கருத்துரிமையை நசுக்கும் வகையில், அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
அதனால் அமைதியாக இயங்கி வந்த அந்த நிறுவனம் தற்போது போராட்டக்களமாக மாறியுள்ளது. கிண்டியில் உள்ள அந்த ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தின் முன்பு தடையை நீக்கக்கோரி, மாணவர் அமைப்பினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
 
தரையில் படுத்துப் போராட்டம் நடத்திய மாணவர் ஒருவரின் சட்டையைப் பிடித்து போலீசார் தூக்குகின்ற புகைப்படமும், பெண் மாணவர் ஒருவரை சுற்றி வளைத்து, ஏழெட்டுப் போலீசார் இரண்டு கைகளையும் பிடித்து இழுக்கின்ற புகைப்படமும், மற்றொரு மாணவரையும், ஐந்து வயதுச் சிறுமியையும் போலீசார் பிடித்திழுத்துக் கொண்டு செல்லும் புகைப்படமும் ஏடுகளிலே வெளிவந்திருப்பது சுதந்திரமான சிந்தனைத்திறனை எந்த அளவுக்கு மத்திய–மாநில அரசுகள் துச்சமென மதிக்கின்றன என்பதையே உணர்த்துகிறது.
 
மாணவர்களின் கருத்துரிமையினைக் காலில் போட்டு மிதிப்பதற்கு சமமான இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. தமிழக அதிமுக அரசு மாணவர்களின் போராட்டம் பற்றியும், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் பெயர்களில் அமைந்த வாசகர் வட்டத்தை பற்றியும், அது தடை செய்யப்பட்டதை பற்றியும் எந்தவிதமான கருத்தையும் வெளிப்படையாக தெரிவிக்காமல், மத்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லாமல் வாய் மூடி மௌனம் சாதிப்பது தடை செய்யப்பட்ட நடவடிக்கையை அதிமுக அரசு ஆதரிக்கிறதோ என்ற அய்யப்பாட்டினையே அனைவருடைய மனதிலும் தோற்றுவித்திருக்கிறது.
 
சாதிப் பாகுபாடுகள், மதவாதம், மூட நம்பிக்கைகள், பெண் அடிமைத்தனம் போன்றவற்றின் பின்னணிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முற்போக்கு கருத்துகளை பரப்பி சமத்துவமான–அறிவியல் பூர்வமான சமுதாயத்தை நிலைநாட்டுவதற்கு கல்லூரிக் காலத்திலேயே தயார் செய்து கொள்வது என்ற சீரிய நோக்கங்களோடு மாணவர்களைச் சிந்திக்கவும், அச்சமின்றி விவாதிக்கவும் களம் அமைத்துத் தரும் ஜனநாயக மையமாக இந்த வாசகர் வட்டம் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக மாணவர் அமைப்பினர் கூறுகிறார்கள்.
 
மத்திய அரசின் பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயக அமைப்புக்குத் தடை விதிப்பது போன்ற இப்படிப்பட்ட தேவையற்ற பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பது போலத் தோன்றினாலும்; அவருக்குக் கீழேயுள்ள அமைச்சர்கள் தன்னிச்சையாக, சர்வாதிகார பாணியில் இது போன்ற பிரச்சனைகளில் தலையிடுவது இளைய சமுதாயத்தின் சிந்தனையோட்டத்தைச் சிதைத்து நாட்டின் அமைதியைக் கெடுக்கத்தான் வழி வகுக்கும்.
 
எனவே இந்த பிரச்சனையில் உடனடியாக பிரதமர் நேரடியாகத் தலையிட்டு, சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் அமைதியையும், ஆரோக்கியமான கல்விச் சூழலையும் நிலைநாட்ட உதவிடுவதோடு, அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக விலக்கிட ஆவண செய்திட வேண்டுமென்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.