1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: சனி, 25 அக்டோபர் 2014 (20:43 IST)

தமிழகத்தில் பால் விலை உயர்வுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்

தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டிருப்பதற்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் சுமார் 15 லட்சம் பேர் உள்ளனர். பால் கொள்முதலில் ஆவின் நிறுவனத்தை விட தனியார் நிறுவனங்கள் கொள்முதலாளர்களுக்கு அதிக விலை கொடுக்கிறார்கள்.
 
இன்று தமிழக அரசு, பசும்பால் கொள் முதல் விலை 5 ரூபாய், எருமைப்பால் விலை 4 ரூபாய் உயர்த்திவிட்டு சமன்படுத்தப்பட்ட பால் விலை ரூ.10 ஏற்றியிருப்பது ஏற்க முடியாதது.
 
பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் 1 லிட்டர் பாலுக்கு ரூ.19 முதல் 23 ரூபாய் கொள்முதல் செய்து வந்தது. இன்று 5 ரூபாய் மட்டும் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் கொள் முதல் விலை 25 முதல் 30 ரூபாய் ஆக உள்ளது. அதே போல் எருமைப்பால் கொள்முதல் ஆவின் நிறுவனம் 28 முதல் 30 ரூபாய் வழங்க, ஆவன தனியார் நிறுவனம் 40 ரூபாய் வழங்குகிறது. இந்த நிலையில் கொள் முதல் விலை வெறும் 4 ரூபாய் ஏற்றப்பட்டுள்ளது.
 
இப்படி மிகக் குறைந்த அளவில் கொள்முதல் விலையை அதிகரித்து விட்டு, பாலின் விலைச் சுமையை ரூ.10 ஏற்றி அதை மக்கள் மீது சுமத்துவது எந்த வகையில் நியாயம், இப்படிப் பால் விலை உயர்வு, அரசு தனியார் நிறுவனங்களுக்கு போட்டி போட்டு விலையை ஏற்றினால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். பால் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் இன்னும் கூட்டிக் கொடுக்க வேண்டும் ஏனென்றால் தமிழகத்திற்கு நாள்தோறும் 1.5 கோடி லிட்டர் தேவைப்படுகிறது. ஆவின் சார்பாக 23.5 லிட்டர் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது. மிச்ச தேவை அத்தனையும் தனியார் மூலமே நிறைவேற்றப்படுகிறது. இன்று கொள்முதல் விலைகுறைவாக ஏற்றப்பட்டு விற்பனை விலை அதிகமாக ஏற்றப்பட்டிருப்பதால் மறுபடியும் தனியார் நிறுவனங்களே பலன் பெறும். எனவே அரசு லாப நோக்கில் செயல்படாமல் மக்களுக்கு சேவை நோக்கில் செயல்படவேண்டும். இல்லையென்றால் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுவது மட்டுமல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
 
அதே போல் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது. டெங்கு காய்ச்சல் பிரத்யோக சிகிச்சைக்காக மாவட்ட அளவிளான அத்தனை மருத்துவமனைகளும் தயார்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் எனில் சிகிச்சைக்கு அதிக ரத்தம் தேவைப்படும் அதனால் அத்தனை ரத்த வங்கிகளும் தேவையான ரத்தத்தோடு தயார்நிலையில் இருப்பதற்கான ஆவன முன்னேற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.