செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 5 மே 2015 (17:51 IST)

வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றியவர்கள் பாமகவினர்: திமுக தாமரைசெல்வன் ஆவேசம்

பாட்டாளி மக்கள் கட்சி துவங்கிய பிறகு என் உயிர்மூச்சு உள்ளவரை நானோ அல்லது என் வாரிசுகளோ எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவிக்கு போட்டியிடமாட்டோம் என்றுதானே உரக்கக் குரல் எழுப்பி நலிவடைந்து கிடந்த வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றினீர்கள்? என்று தர்மபுரி முன்னாள் திமுக எம்.பி. தாமரைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 
 
தமிழகத்தின் சீரழிவு வரலாற்றை திமுக இல்லாமல் எழுத முடியாது என பாமக எம்.பி. அன்புமணி திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் தர்மபுரி முன்னாள் தி.மு.க. எம்.பி. தாமரைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியபோது,
 
அன்புமணிக்கு பழைய அரசியல் தெரியாமல் போயிருக்கலாம். குறைந்த பட்சம் அவர் தனது தந்தையிடமாவது கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம். தேர்தல் திருடர்கள் பாதை என்றும் தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறித்தானே இந்த சமுதாயத்தை வளைத்துப் போட நினைத்தீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி துவங்கிய பிறகு என் உயிர்மூச்சு உள்ளவரை நானோ அல்லது என் வாரிசுகளோ எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவிக்கு போட்டியிடமாட்டோம் என்றுதானே உரக்கக் குரல் எழுப்பி நலிவடைந்து கிடந்த வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றினீர்கள்?
 
வன்னியர் சமுதாயத்திற்காக முதன் முதலில் 20 சதவீத இடஒதுக்கீடும் மத்திய அரசில் வன்னியர் ஒருவருக்கு கேபினட் அமைச்சர் பதவியும் கொடுத்தவர் கருணாநிதிதான். இல்லையென்று அன்புமணியால் மறுக்க முடியுமா? அன்புமணி தன் பதவிக்காக எதையும் பேசி விட்டுப்போகட்டும். ஆனால் இந்த சமுதாயத்திற்காக திமுக ஆற்றிய பணிகளை கொச்சைப்படுத்திப் பேச வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக வருவதற்கு உதவி செய்தவர் கருணாநிதிதான். மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது இந்தூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு இன்றைக்கு டெல்லி நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நடந்து கொண்டிருக்கும் அன்புமணி ஊழல் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது.
 
சமூக நீதி காப்பவர் என்று கூறி திமுகவுடன் கூட்டணி வைப்பீர்கள். அன்பு சகோதரி பார்த்துக்கொள்வார் என்று கூறி அதிமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள். ஏன் வாழப்பாடி ராமமூர்த்தி துவங்கிய ராஜீவ் காங்கிரஸுடன் கூட கூட்டணி வைத்தீர்கள். என் வழக்கை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி பாஜகவுடன் கூட்டணி வைத்தீர்கள். ஒரு சில கேள்விகளுக்கும், ஒரு சிலரைப் பற்றியும் நான் பதில் அளிப்பதில்லை என்று உங்கள் தந்தை கூறிய பிறகும், விஜயகாந்தை தேடிச் சென்று சால்வை அணிவித்து என் தொகுதியில் உங்கள் கட்சிக்காரர்களை வாக்களிக்கச் சொல்லுங்கள் என்று கெஞ்சியது யார்? நீங்கள் கூட்டணி வைக்காத தமிழக கட்சி ஒன்றை இன்றைக்கு உங்களால் சொல்ல முடியுமா?
 
மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில்அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கும் தமிழகத்தை மருத்துவர் என்ற முறையில் என்னால் மீட்க முடியும் என்று கூறியிருக்கிறீர்கள். பணம் வாங்கிக் கொண்டு தரமற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கினீர்களே அந்த கல்லூரிகளில் இருந்து மருத்துவரைக் கொண்டு வந்து வைத்து மீட்கப் போகிறீர்களா?
 
தாங்கள் இப்போது செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். மு.க.ஸ்டாலின் உழைப்பை கற்றுக்கொள்ளுங்கள். வன்னியர் சமுதாயத்தை வசனம் பேசியே வஞ்சிக்காமல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு திட்டங்களால் முன்னேறிக் கொண்டிருக்கும் அந்த சமுதாயத்தை தொந்தரவு பண்ணாமல் தயவு செய்து விட்டு விடுங்கள் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.