வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 4 மார்ச் 2015 (17:29 IST)

’தமிழை நேசித்தேன் தெருவுக்கு வந்துவிட்டேன்’ - கவிஞர் தாமரை வீதியில் தொடர்ந்து போராட்டம்

கவிஞர் தாமரை தனது கணவர் தியாகுவிற்கு எதிராக தொடர்ந்து 6ஆவது நாளாக வீதியிலேயே தங்கிப் போராட்டம் நடத்தி வருகிறார்.
 
கவிஞரும், பாடலாசிரியருமான கவிஞர் தாமரை கடந்த வெள்ளிக் கிழமை [பிப்-27-2015] தனது கணவர் தியாகுவிற்கு எதிராக சூளைமேட்டில் உள்ள தியாகுவின் இல்லத்தில் போராட்டத்தை அறிவித்தார்.
 
மேலும், தனது மகன் சமரனுடன், ’இறக்க நேர்ந்தாலும் தெருவிலேயே இறப்போம். எங்களுக்கு நியாயம் கிடைக்காமல் வீடு திரும்ப மாட்டோம்’ என்று கவிஞர் தாமரை அறிக்கை வெளியிட்டு போரட்டத்தை தொடர்ந்தார்.
 

 
அவர் அறிக்கையில் சொன்னதைப் போலவே தொடர்ந்து 6ஆவது நாளாக இன்றும் வீதியிலேயே தங்கி போராட்டம் நடத்தி வருகிறார். திங்கட்கிழமை இரவு தியாகு வேளச்சேரியில் இருப்பதாக அறிவித்தவுடன், அங்கு சென்று போராட்டம் நடத்தினார். அத்துடன் அன்றைய இரவையும் வேளச்சேரி அம்மன் கோயில் வீதியிலேயே கழித்துள்ளார்.
 
அதேபோல, இன்று 5ஆவது நாளான நேற்றும் (03.03.2015), தனக்கு நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்து சென்னை ஆற்காடு சாலையில் உள்ள கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகில் அமைந்திருக்கும் கலைஞர் பூங்காவில் தனது போராட்டத்தை தொடர்ந்து வந்தார்.
 
இது குறித்து கவிஞர் தாமரை, ”இதுவும் நடுத்தெருதான். 'தமிழுக்கு உழைத்தேன், தெருவுக்கு வந்து விட்டேன்' என்ற என் செய்தியில் மாற்றமில்லை.
 
தியாகு எங்கே இருக்கிறார் என்று தெரிந்தவர்கள் சொன்னால் அங்கே போராட்டக் களத்தை மாற்றிக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன். நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்” என்று தெரிவித்திருந்தார்.
 
6ஆவது நாளான இன்றும் (04-03-2015) அவர், வள்ளுவர் கோட்டத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்து தேசிய காங்கிரஸ் ஆகிய அமைப்பினை சார்ந்தவர்கள் தாமரையை சந்தித்து அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.