1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2015 (16:18 IST)

இரவை வீதியில் கழித்த கவிஞர் தாமரை; நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு

தோழர் தியாகுவிற்கு எதிராக போராட்டம் நடத்திவரும் கவிஞர் தாமரை நேற்று நான்காவது நாளின் இரவை வீதியில் கழித்துள்ளார்.
 
கவிஞரும், பாடலாசிரியருமான கவிஞர் தாமரை கடந்த வெள்ளிக் கிழமை [பிப்-27] தனது கணவர் தியாகு தலைமறைவு ஆகிவிட்டதாகவும், அதனால் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

 
மேலும், தனது மகனுடன், ’இறக்க நேர்ந்தாலும் தெருவிலேயே இறப்போம். எங்களுக்கு நியாயம் கிடைக்காமல் வீடு திரும்ப மாட்டோம்’ என்று கவிஞர் தாமரை தனது அறிக்கை வெளியிட்டு தியாவிற்கு எதிரான போரட்டத்தை அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று (02.03.2015) நான்காவது நாளாக வேளச்சேரியில் போராட்டம் நடத்தினார். அத்துடன் நேற்றைய இரவையும் வேளச்சேரி அம்மன் கோயில் வீதியிலேயே கழித்துள்ளார்.
 

 
இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில், ’நான்காம் நாள் இரவும் வேளச்சேரி அம்மன் கோயில் வீதியில் கழிகிறது. இன்று நிலமை சற்றுத் தேவலை. ஒரு நாள் அனுபவம் கூடிவிட்டதல்லவா !!!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், ”சமரன் தான் பாவம். சித்திரக்கதை வாசிக்கச் சொல்லிக் கேட்டு அலுத்துப் போய் தூங்கி விட்டான். இடைவிடாத தொலைபேசி அழைப்புகளின் ஊடாக அந்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை” என்று தனது மகன் குறித்த நிலைமையையும் பதிவு செய்துள்ளார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

அதேபோல, இன்று 5ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவிஞர் தாமரை நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.
 
ஐந்தாவது நாளாக இன்றும் (03.03.2015) சென்னை ஆற்காடு சாலையில் உள்ள கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகில் அமைந்திருக்கும் கலைஞர் பூங்காவில் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
 
இது குறித்து தெரிவித்துள்ள அவருடைய முகநூல் பதிவில், “இரண்டு நாட்கள் வேளச்சேரியில் தியாகுவின் வீட்டிற்கு எதிரே இருந்தோம். அங்கிருந்தும் ஓடித் தலைமறைவாகியுள்ள தியாகு இருக்குமிடம் தெரியவில்லை.
 

 
நேற்று ஓர் ஊடகத்திற்கு இந்தப் பூங்காவிலிருந்து பேட்டி அளித்ததாக அறிந்தேன். எனவே போராட்டத்தை இந்த இடத்திற்கு மாற்றிக் கொண்டேன். இதுவும் நடுத்தெருதான். 'தமிழுக்கு உழைத்தேன், தெருவுக்கு வந்து விட்டேன்' என்ற என் செய்தியில் மாற்றமில்லை.
 
தியாகு எங்கே இருக்கிறார் என்று தெரிந்தவர்கள் சொன்னால் அங்கே போராட்ட களத்தை மாற்றிக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன். நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
 
பொதுவெளியில் போராட்டத்தைத் தொடரும் கவிஞர் தாமரை, இதுவரை காவல் நிலையத்தையோ அல்லது நீதிமன்றத்தையோ நாடவில்லை என்பது குறிப்பிடதக்கது.
 
இதற்கு தாமரை ‘சட்டரீதியிலான தீர்வை எதிர்பார்க்கவில்லை என்றும் சமூக ரீதியிலான தீர்வுதான் தேவை என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.