வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 19 டிசம்பர் 2014 (13:08 IST)

சென்னையில் இருந்து ஜெர்மனி சென்ற விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு; 195 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து ஜெர்மனியில் உள்ள பிராங்பட் நகர் சென்ற விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டது. உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் 195 பயணிகள் உயிர் தப்பினர்.
 
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1.45 மணிக்கு 195 பயணிகள், 7 விமான சிப்பந்திகளுடன் ஜெர்மனியில் உள்ள பிராங்பட் நகருக்கு விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் வானில் பறந்த போது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.
 
உடனே அவர், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து நள்ளிரவு 2.15 மணிக்கு விமானம் அவசரமாக சென்னையில் தரை இறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர்.
 
விமானத்தில் கோளாறு சரி செய்த பின்னர் காலை 5.30 மணிக்கு மீண்டும் விமானம் புறப்பட்டு சென்றது. விமானி உரிய நேரத்தில் கோளாறை கண்டுபிடித்ததால் 195 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
 
இதேபோல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 10.20 மணிக்கு மதுரைக்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 64 பயணிகளும், 5 விமான சிப்பந்திகளும் விமானத்தில் ஏறினார்கள்.
 
விமானத்தை எடுக்கும் முன்பு விமானி இறுதிக்கட்ட சோதனை செய்தபோது விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தொழில்நுட்ப வல்லுனர்கள் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
 
கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் 3 மணி நேரம் தாமதமாக பகல் 1.30 மணிக்கு விமானம் மதுரைக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.