வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2014 (17:32 IST)

கண்டித்த ஆசிரியரை அடியாட்களை வைத்து தாக்கிய மாணவன்; சுயநினைவிழந்த நிலையில் ஆசிரியர்

வகுப்பறையில் மாணவனை கண்டித்ததற்காக, அடியாட்களை அழைத்து வந்து ஆசிரியரைத் தாக்கியதால் ஆசிரியர் சுய நினைவிழந்துள்ளார்.
 
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாணவன் பாடத்தை கவனிக்காமல் சக மாணவனுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். இதைக் கவனித்த உடற்பயிற்சி ஆசிரியர் பாஸ்கரன் அந்த மாணவனைக் கண்டித்ததாகத் தெரிகிறது.
 
இதனால், மாணவன் பள்ளியிலிருந்து வெளியேறி இருக்கிறான். பின்னர் பிற்பகலில் வழக்கறிஞர்கள் எனக் கூறிக்கொண்டு 3 நபர்கள் ஆசிரியர் பாஸ்கரனைப் பார்க்க வந்துள்ளனர். பாஸ்கரன்  வந்ததும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
அப்போது வெளியிலிருந்து ஏறக்குறைய 10க்கும் மேற்பட்டோர், அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் பாஸ்கரனை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பாஸ்கரன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
பாஸ்கர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருந்த ஆசிரியர் பாஸ்கரன் சுய நினைவிழந்துள்ளார். இதையடுத்து பாஸ்கரனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கோடம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
பிறகு காவல்துறையினர் ஆசிரியரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். அதன்படி மாணவன் உள்ளிட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.