வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 1 செப்டம்பர் 2014 (07:33 IST)

ஆசிரியர் தினம் பெயர் மாற்றம்: கருணாநிதி கண்டனம்

ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்'' ஆகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பதற்குத் திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கருணாநிதி பேசியது:-

“தமிழனைச் சீரழிக்க வந்துள்ள மொழி ஆதிக்கத்துக்குப் பெயர் "சஞ்சுகிருதம்“ என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் சொல்லுவார். அதாவது, சம்ஸ்கிருதத்தை அப்படிக் கேலியாக, அதை யாரும் பின்பற்றாதீர்கள் என்று சொல்லுவார்.

அந்த சம்ஸ்கிருதம்தான் இன்றைக்குத் தமிழகத்தில் சம்ஸ்கிருத வாரமாகக் கொண்டாடப் பட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு ஓங்கி வளர்ந்துள்ளது.

மேலும், ஆசிரியர் தினம் என்பதற்குப் பதிலாக "குரு உத்சவ்“ என்ற பெயரில் அதைக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகச் செய்தி வெளிவந்துள்ளது.

ஆசிரியர் தினத்தை நாம் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம். இப்படி நம்முடைய மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்துவர்.

பிறகு இந்த மொழிக்குரியவர்களை, இந்த மொழியால் உயர்ந்தவர்களை, இந்த மொழிக்காக தங்களை வருத்திக் கொண்டவர்களை வீழ்த்தி விட கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை“ என்று கருணாநிதி கூறினார்.