வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2015 (14:22 IST)

மாணவனுடன் ஓடிப்போன டீச்சர் சேர்ந்து வாழ விருப்பம் - நீதிமன்றம் அனுமதி

திண்டுக்கல்லில் மாணவனுடன் ஓடிப்போன டீச்சர் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததை அடுத்து, விருப்பப்படி சேர்ந்துவாழ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியை சேர்ந்த சதீஸ்குமார் (18) என்ற மாணவர் கடந்த ஆண்டு நடந்த பிளஸ் - 2 தேர்வில் தமிழ் பாடத்தை தவிர மற்ற அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளார். இதனால் திண்டுக்கல்லில் உள்ள ஒரு டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து பயின்று வந்துள்ளார்.
 

 
அதே டுடோரியல் கல்லூரியில், முத்தழகுபட்டியை சேர்ந்த செபாஸ்டின் சாரதி (21) எனபவர் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பிறகு இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
 
மேலும் விடுமுறை தினங்களிலும் வகுப்பு இருப்பதாக கூறி பெற்றோரை ஏமாற்றி வெளியூர்களுக்கும் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த காதல் அரங்கேற்றம் வீட்டிற்கு தெரியவர இருவரது வீட்டிலும் கண்டித்துள்ளனர். ஆனாலும், இருவரும் நெருங்கிப் பழகியே வந்துள்ளனர்.
 
இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற செபாஸ்டின் சாரதி இரவு வெகுநேரமாகியும் வீடுதிரும்பாததால், அவரது தந்தை டுடோரியல் சென்று விசாரித்தார். அப்போதுதான் மாணவர் சதீஸ்குமாருடன் ஆசிரியை ஓடியிருப்பது தெரியவந்தது.
 
இது குறித்து தேவராஜ் திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அதன்பேரில், ஆசிரியையை கடத்தி சென்று விட்டதாக அந்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் செபாஸ்டின் சாரதியும், சதீஷ்குமாரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பட்டி கிராமத்தில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
 
இதனைத் தொடர்ந்து அவர்களை பிடித்த காவல் துறையினர், அவர்கள் 2 பேரையும், திண்டுக்கல் 1ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் விருப்பப்பட்டு மாணவருடன் சென்றதாகவும் செபாஸ்டின் சாரதி கூறியுள்ளார்.
 
மேலும் தனது விருப்பப்படி, மாணவன் சதீஷ்குமாருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரது விருப்பப்படி வாழ்வதற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவருடன், ஆசிரியை செபாஸ்டின் சாரதி சென்று விட்டார்.