செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 9 நவம்பர் 2016 (10:50 IST)

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தமிழக ஆசிரியர் நியமன தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில், தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.


தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண்: 25இல், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் அனைத்து வகையான இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் அரசாணை 71-ல் ‘வெயிட்டேஜ்’ முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; மேலும், வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறினர்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும், அதன் மதுரை கிளையிலுமாக தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் நடத்திய விசாரணையில், தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையோ, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாக கூறி, அரசாணைக்கு தடை விதித்தது.

ஒரே நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகள் வெவ்வேறு விதமான தீர்ப்பை வழங்கியதால், வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. அனைத்து பிரிவினருக்கும் வழங்கப்பட்ட 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அங்கு கோரிக்கை விடுக்கப் பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த அக்டோபர் 25ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என்று அறிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்படும் என்பதும், அதே போன்று, வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.