செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 12 ஜூலை 2014 (09:51 IST)

பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுடும் திறமையை காட்டக்கூடாது: டி.ஜி.பி.ராமானுஜம் போலீசாருக்கு அறிவுரை

பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுடும் திறமையை காவல்துறையினர் காட்டக்கூடாது. தற்காப்புக்காக ரவுடிகள், குற்றவாளிகள், தீவிரவாதிகள் மீது துப்பாக்கியால் சுடும் திறமையை காவல்துறையினர் காட்டுவதில் தவறில்லை என்று டி.ஜி.பி.ராமானுஜம் அறிவுரை வழங்கியுள்ளார்.
 
தமிழக போலீசாருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி, காஞ்சீபுரம் மாவட்டம், ஒத்திவாக்கத்தில் கடந்த 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி முடிய நடைபெற்றது. இந்த போட்டியில் பெண் காவல்துறையினர் உள்பட 210 பேர் கலந்துகொண்டனர். 14 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆயுதப்படை காவல்துறையினர் பெற்று சாதனை படைத்தனர். சென்னை மாநகர காவல்துறையினர் 2-வது இடத்தையும், மத்திய மண்டல அணி 3-வது இடத்தையும் பெற்றனர்.
 
இந்த போட்டிகளின் உச்சகட்ட போட்டியும், அனைவரையும் கவர்ந்த போட்டியுமாக கருதப்பட்ட உயர் காவல்துறை அதிகாரிகளுக்கிடையே நடந்த துப்பாக்கி சுடும் போட்டி நேற்று காலை சென்னை அடையாறு மருதம் வளாகத்தில் நடந்தது.
 
இந்த போட்டியில் துணை கமிஷனர் சுதாகர் 60-க்கு 60 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்தார். இணை கமிஷனர் தினகரன், சூப்பிரண்டுகள் அன்பு, சிபிசக்கரவர்த்தி ஆகியோர் 59 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார்கள்.
 
பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. டி.ஜி.பி.ராமானுஜம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் டி.ஜி.பி.ராமானுஜம், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
முதலமைச்சர் ஜெயலலிதா இதுபோன்ற போட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுத்தொகையை 10 மடங்காக உயர்த்தி கொடுத்துள்ளார். முன்பு முதல் பரிசு ரூ.50 ஆயிரமாக இருந்ததை ரூ.5 லட்சமாகவும், 2வது பரிசு ரூ.30 ஆயிரமாக இருந்ததை ரூ.3 லட்சம் என்றும், 3வது பரிசு ரூ.20 ஆயிரம் என்று இருந்ததை, ரூ.2 லட்சம் என்றும் உயர்த்தி கொடுத்துள்ளார்.
 
துப்பாக்கி சுடும் போட்டிகளில் தங்கள் திறமையை காட்டிய காவல்துறையினர், பொதுமக்கள் மீது அந்த திறமையை காட்டிவிடக்கூடாது. அதே நேரத்தில் தற்காப்புக்காக குற்றவாளிகள், ரவுடிகள், தீவிரவாதிகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வதில் தவறில்லை.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.