ஜல்லிக்கட்டுக்காக 58 எம்.பிக்களும் செய்க ராஜினாமா !


Murugan| Last Modified வியாழன், 12 ஜனவரி 2017 (10:49 IST)
அக்கினி குஞ்சுக்களின் எழுச்சி
 
தமிழகம் எங்கும் அக்கினி குஞ்சுக்களின் அணி வகுப்பு
 
ஏன் இந்த கொந்தளிப்பு !
 
நீர் இழந்தோம் ! ஏர் இழந்தோம் !
 
உண்ட சோறு இழந்தோம் ! 
 
ஏறு தழுவுதல் இழந்துக் கொண்டிருக்கிறோம் !

 

 
 
தமிழர்களின்  பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் காக்க அணி அணியாக  திரண்ட நம் மாணவ செல்வங்கள். சாதி, மதம் பாராமல் அணி அணியாக புரட்சி மலர்கள். சென்னை, மதுரை, புதுக்கோட்டை,   திருப்பூர் என பல இடங்களில் வெள்ளம் என தெருக்களில் திரண்ட எம் மாணவ செல்வங்கள் நாளைய தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். 
 
அறுபதுகளில் அண்ணா என்ற ஒரு மாபெரும் தலைவரின் வழிகாட்டலில் திமுக என்ற ஒரு கட்சி சார்புடன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர் சமூகம் களம் கண்டு, வெற்றி பெற்றது. ஆனால் தற்சமயம் தமிழகத்தில் மாணவ சமூகம் தலைவர்களின் வழிகாட்டல் இல்லாமல் கட்சி சார்பு இல்லாமல் சப்தமின்றி யுத்தம் செய்து வருகிறது. இவர்கள் அனைவரும் நம்  மொழி போர் தியாகிகளுக்கு சமம் ஆனவர்கள். இவர்களுக்கு  சரியான தலைமையும் வழிகாட்டலும் இருக்குமே ஆனால் எகிப்தில் ஏற்பட்டதுப் போல ஒரு அரபு வசந்தத்தை மல்லிகை புரட்சியை கொண்டு வர முடியும்.
 
உச்ச நீதி மன்றமே ! யாருக்கு யார் பிச்சை போடுவது:
 
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு இல்லாத கருப்பு பொங்கலை நோக்கி தமிழகம். நீதி மன்றத்தின் கருணை பார்வைக்காக நாம். நாம் எதிர்பார்க்கும் கருணையும் ஒரு வகை யாசகம்தான்.  வழக்கமாக அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்கும் யாசகத்தை இந்த முறை நாம் உச்ச நீதிமன்றத்திடம் எதிர்பார்க்கிறோம்.  
 
எங்களின் நம்பிக்கையையும் உணர்வுகளையும் கேள்விகள்  கேட்க, விசாரணைகள்  செய்ய, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? உள்ளூர்க்காரன் குற்றவாளி கூட்டில் வெளியூர்காரன் (PETA) சாட்சி  கூட்டிலா? 
 
மோடியும் பிலாத்தும்
 
வழக்கம் போல நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையை சுட்டிக்காட்டி இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டை கை கழுவப் பார்க்கிறது மத்திய அரசு. ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் கோரி பிரதமரை சந்திக்க சென்ற எம்.பிக்களின் மனுவைக்கூட ஐந்து நிமிடங்கள் ஒதுங்கி நேரில் பெற முடியாத மன நிலையில் தான் நம் பிரதமர் இருக்கிறார். மனமே இல்லாத போது மார்க்கம் மட்டும் எப்படி சத்தியம் ? 
 
நான் இவன் இடத்தில் ஒரு குற்றமும் காணேன் (யோவான் அதிகாரம் 19) என்று சொல்லி தனது கைகளை கழுவி, ஏசுவை சிலுவையில் அறைய உத்தரவிட்ட கவர்னர் பிலாத்தைப் போல மேன்மை பொருந்திய பிரதமர் மோடியும் தமிழர்களை கை கழுவிவிட்டார்.
 
செய்க  ராஜினாமா !
 
தமிழகத்துக்கு காவேரி நீர் இல்லை. வறட்சி நிவாரணம் இல்லை. புயல் அடித்தாலும் கேட்பார் இல்லை. பிறகு எதற்கு டெல்லியில் எங்களின் பிரதிநிதியாக நீங்கள்? வாக்களித்த நாங்கள் சொல்கிறோம் ராஜினாமா செய்யுங்கள் எம்.பிக்களே! மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தராத பதவி எதற்கு உங்களுக்கு? ராஜினாமா செய்யுங்கள் எம்.பிக்களே ! 19 ராஜசபா எம்.பிக்களும், 39 லோக்சபா எம்.பிக்களும் கட்சி சார்பற்று செய்க ராஜினாமா! டி கே ரங்க ராஜன் (CPI-M), டி ராஜா (CPI), திருமதி கனிமொழி (DMK) நவநீத கிருஷ்ணன்(ADMK), சுதர்சனா நாச்சியப்பன் (Congress),  மணி ஷங்கர் ஐயர் (Congress), டாக்டர். அன்பு மணி (PMK), பொன். ராதா கிருஷ்ணன் (மத்திய அமைச்சர்), தம்பித்துரை (துணை சபாநாயகர்)  உட்பட அனைவரும் கட்சி சார்பற்று செய்க ராஜினாமா! களம் தயாராக இருக்கிறது. வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். தலைமைக்கு நீங்க ரெடியா ?   
 
 
 
 
இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
Sumai244@gmail.com

webdunia

இதில் மேலும் படிக்கவும் :