நடராஜனுக்கு காட்டிய துரிதம் ஏன் ஜெயலலிதாவுக்கு காட்டவில்லை: தமிழிசை அதிரடி கேள்வி!

நடராஜனுக்கு காட்டிய துரிதம் ஏன் ஜெயலலிதாவுக்கு காட்டவில்லை: தமிழிசை அதிரடி கேள்வி!


Caston| Last Modified வியாழன், 5 அக்டோபர் 2017 (15:14 IST)
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்ததில் காட்டிய துரிதத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஏன் காட்டவில்லை என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
 
சசிகலாவின் கணவர் நடராஜன் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் முற்றிலுமாக செயலிழந்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் மாற்று உறுப்புக்காக காத்திருந்தார். இந்நிலையில் அவருக்கு மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரின் உறுப்பை வெற்றிகரமாக பொறுத்தி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
 
இந்த உறுப்பு தானம் வழங்கப்பட்டதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என பல கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
 
அப்போது பேசிய அவர், உறுப்புதானம் வழங்கப்பட்ட நிகழ்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதுமாதிரியான சம்பவங்களால் ஏழைகளுக்கு கிடைக்கவேண்டிய உறுப்புகள், தனியார் மருத்துவமனைகளின் பண ஆதிக்கத்தால் பணம் படைத்தவர்களுக்கு கிடைக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
 
எந்த மருத்துவமனை அதில் சிகிச்சை பெறும் நோயாளி மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்று அறிவிக்கிறதோ, அந்த நோயாளி உறுப்புதானம் செய்வதாக அறிவித்தபின் அந்த மருத்துவமனைக்குதான் அதிகமான உறுப்புகளைப் பெற்றுக்கொள்ளும் உரிமை இருக்கிறது.
 
மூளைச்சாவு அடைந்த இளைஞர் மிகவும் ஏழ்மையான குடும்பச்சூழலைக் கொண்டவர். அவர் யாரால் குளோபல் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு அனுமதி அளித்த மருத்துவரின் மீது பல குற்றங்கள் இருப்பதனால், இந்த விஷயத்தில் தீவிரமாக விசாரணை நடத்தவேண்டும் என்றார் அவர்.
 
மேலும் இதுமாதிரியான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்ற நிலையில், சிகிச்சைபெற்றுக் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஏன் இந்த துரிதம் காட்டவில்லை போன்ற சந்தேகமும் எழுகிறது எனவும் தெரிவித்தார் தமிழிசை.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :