வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2015 (04:46 IST)

ஈழத்தமிழர் பிரச்சனை: தமிழக அரசியல் கட்சிகள் மோடிக்கு அழுத்தம் கொடுக்க தமிழருவி மணியன் வலியுறுத்தல்

ஈழத்தமிழர் பிரச்சனையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அரசியல் பாகுபாடுகளை மறந்து, பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து, உள்நாட்டு விசாரணையே நடத்தப்படும் என்று இலங்கை அதிபர் சிறீசேனா அறிவித்திருப்பது நமக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை.
 
காரணம், தமிழின அழிப்பில் ஈடுபட்டிருக்கும் இலங்கை அரசு ஒருபோதும் நேர்மையான முறையில் நியாயமான விசாரணையை நடத்தாது என்பதை சர்வதேச சமூகம் உணர வேண்டும்.
 
இலங்கை நீதிமன்றங்களின் நம்பகத்தன்மையை மனித உரிமை ஆணையத்தின் ஆணையர் உசேன், தான் சமர்ப்பித்த அறிக்கையில் கேள்விக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றி முழுக்க முழுக்க உள்நாட்டு விசாரணையே மேற்கொள்ளப்படும் என்ற சிறீசேனாவின் அறிவிப்பு, விசாரணையின் நோக்கையும் போக்கையும் இப்போதே நமக்குத் தெளிவாக உணர்த்திவிட்டது.
 
ஈழத்தமிழர்களின் துயர் தீர இரண்டு வழிகள் மட்டுமே உண்டு. ஒன்று, புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சர்வதேச அளவில் அறவழியில் போராடி அழுத்தம் தரவேண்டும். மற்றொன்று, தாயகத் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஓரணியில் நின்று ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும்.
 
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே அரசியல் நடத்துவதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. ஆனால், நம் இனம், மொழி மற்றும் உரிமை என்று வந்துவிட்டால், கட்சி ரீதியான கோபதாபங்களை மறந்துவிட வேண்டும்.
 
மூன்றாவது முறையாகப் பதவியேற்ற நாள் தொட்டு இன்றுவரை நம் முதல்வர் ஜெயலலி, ஈழப்பிரச்சினையில் தொடர்ந்து தெளிவான அணுகுமுறைகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.
 
ஒட்டுமொத்த தமிழினத்தின் வரவேற்பைப் பெறும் வகையில் முதல்வர் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு டெல்லியில் பிரதமரைச் சந்தித்து தார்மிக அழுத்தத்தைத் தந்தாக வேண்டும்.
 
இந்திய அரசு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற சர்வதேச நாடுகளின் மூலம் நியாயமான விசாரணையை இலங்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தமிழகத்தின் சார்பில் இந்த அரசியல் அழுத்தத்தை உருவாக்க வேண்டிய கடமை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உள்ளது.
 
எனவே, அனைத்துத் தலைவர்களோடு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அழுத்தத்தைத் தருவதன் மூலம் ஈழத்தமிழருக்கான நீதி கிடைப்பதற்கும் வழி வகை பிறக்கும். இதனால், முதல்வர் ஜெயலலிதாவுக்கு உலகத்தமிழர்களின் பேராதரவு பல்கிப் பெருகும் என தெரிவித்துள்ளார்.