1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 டிசம்பர் 2018 (07:14 IST)

எஸ் ரா எனும் தேசாந்திரி- சாகித்ய அகாதமி விருது வாழ்த்துகள்

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாடமி விருது இந்த வருடம் தமிழ் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியத்துக்குக் கரிசல் பகுதியில் இருந்த வந்த எழுத்தாளர்கள் அளித்த பங்கு அளப்பரியது. கி.ராஜநாராயணன், கு. அழகிரிசாமி, கோணங்கி வரிசையில் அவர்களிடம் ஆதர்சம் பெற்று எழுத வந்த எஸ் ரா கடந்த 25 வருடங்களாக தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைத்தொகுப்பு, பயண நூல், சினிமா அறிமுக நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

இந்தாண்டு இவர் எழுதிய சஞ்சாரம் எனும் நாவலுக்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. கரிசல் பகுதியில் வாழும் நாதஸ்வரக் கலைஞர்களின் வறுமைப் படிந்த வாழ்க்கையை பதிவு செய்த நாவல் இது.

எஸ் ரா நெடுங்குறுதி, யாமம், உறுபசி, இடக்கை, பதின் முதலிய நாவல்களும் பல சிறுகதைத் தொகுதிகள் மற்றும் கட்டுரைத் தொகுப்பு உள்ளிட்டப் பல நூல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் தேசாந்திரி எனும் பதிப்பகத்தை தொடங்கி தனது நூல்கள் அனைத்தையும் தானேப் பதிப்பித்தி வருகிறார்.

எழுத்தில் மட்டுமல்லாமல் சினிமாத்துறையில் இவர் குறிப்பிடத்தகுந்த பணிகளை செய்துள்ளார். பாபா, உன்னாலே உன்னாலே, சண்டக்கோழி, சமர், சண்டக்கோழி 2 ஆகியப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

விருது பெற்றுள்ள எஸ் ராவுக்கு முதல்வர் பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலத் தலைவர்களும் எழுத்தாளர்களும் சினிமாத்துறையினரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.