வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 1 ஆகஸ்ட் 2015 (23:04 IST)

அரசு நினைத்தால் 5 ஆண்டுகளில் மதுவிலக்கை அமுல்படுத்த முடியும்: தமிழருவி மணியன்

அரசு நினைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும் என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
\

 
இது குறித்து, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாட்டை மது இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே கடும் போராடி வந்த சசி பெருமாள் மார்த்தாண்டம் பகுதியில் மதுவுக்கு எதிரான போராட்டக் களத்திலேயே உயிர் நீத்திருப்பது கடும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் அளித்துள்ளது.
 
மார்த்தாண்டம் பகுதியில் மதுக்கடையை அகற்றக் கோரி, கடந்த ஒரு ஓராண்டுக்கு மேலாக, தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், ஒரு மதுக்கடையை மூடுவதற்கு இந்த அரசு முன்வராதது மிகவும் கண்டிக்கத்தக்கது.
 
காந்தியவாதி சசிபெருமாள் செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று குறிப்பிட்ட அந்த மதுக்கடையை மூடாமல் போனால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக உறுதியுடன் எடுத்துரைத்த அக் நேரத்தில் மதுக்கடையை மூடும் முடிவை அதிகாரிகள் அறிவித்து இருந்தால் கூடச் சசிபெருமாள் உயிர் விடும் நிலை நேர்ந்திருக்காது.
 
மதுவற்ற மாநிலத்தைக் காண வேண்டும் என்கிற மகத்தான இலட்சியத்தோடு சசிபெருமாள் வாழ்க்கை முடிந்துவிட்டது. இனியாவது மக்கள் குரலுக்குச் செவிமடுக்கும் அரசாகத் தமிழக அரசு நல்ல முடிவை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
 
ஒரே நாளில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்பதை மக்களும் சமூக ஆர்வலர்களும் நன்கறிவார்கள். ஆனால் படிப்படியாக இந்தத் தீமையிலிருந்து தமிழகம் விடுபடுவதற்குத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
தமிழகத்தில், 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது வழங்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பார்கள் அனைத்தும் மூடப்பட்டு வெளியே பொது இடங்களில் மது அருந்தும் சூழலை முற்றாகத் தடுக்க வேண்டும்.
 
படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையையும் விற்பனைக்கு வரும் மதுப் புட்டிகளின் எண்ணிக்கையையும் குறைத்துக் கொண்டே வரவேண்டும். இவற்றால் ஏற்படும் வருவாய் இழப்பை வேறு வழிகளில் ஈடுகட்ட முயல வேண்டும். அரசு நினைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை நடைமுறை படுத்த முடியும்.
 
தாய்க்குலத்தின் பிரதிநிதியாக ஆட்சிப் பொறுப்பில் உள்ள முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பெண் மக்களின் வாக்குக்களைப் பெறவேண்டும் என்று நினைத்தால் மதுக்கடைகளை மூடும் வழியை மேற்கொள்ள வேண்டும்.
 
இந்த நடவடிக்கைகள் தான் சசி பெருமாளின் ஆன்மாவுக்குச் சாந்தி தரும். இதன் மூலம் இந்த ஆட்சியின் மீது படிந்துள்ள களங்கம் துடைத்தெறியப்படும். தமிழகமும் சாராய வாசனையின்றி அமைதியும், ஆரோக்கியமும் கொண்டதாக மாறும் என்று கூறியுள்ளார்.