1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 25 மே 2015 (17:41 IST)

அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் ஓரணியில் திரள வேண்டும்: மதுரை மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 

 
மதுரை ஒத்தக்கடையில் தென்மாவட்ட திமுக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, ''இந்த கூட்டம் நடைபெறும் மதுரையில் தான் மீனாட்சி அம்மன் கோவிலும், உலகப்புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மகாலும் உள்ளன. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லும் நக்கீரனின் பூமி இது. அப்படிப்பட்ட இந்த புனித நகருக்கு வந்திருக்கிறேன். ஏன் வந்திருக்கிறேன். ஜெயலலிதா விடுதலையானதை பற்றி பேசவா? இல்லவே இல்லை. ஜெயலலிதா வழக்கில் நீதி கேட்டா வந்திருக்கிறேன் இல்லை. நான்கு ஆண்டுகளாக நடைபெறும் அதிமுகவின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இங்கு முதல் களத்தை அமைத்திருக்கிறேன். எனவே மக்கள் ஓரணியில் திரள வேண்டும்.
 
ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் இந்த மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 36 சதவீதம் அதிகரித்து விட்டது. இந்த ஆண்டில் நெல்லை, தூத்துக்குடியில் மட்டும் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி விட்டது. 2 லட்சம் விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் அதிமுக ஆட்சியில் 7 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதெல்லாம் நான் சொல்லவில்லை. போலீஸ் உயர் அதிகாரிகள் கொடுத்த தகவல்.
 
ஜெயலலிதா எப்படி விடுதலை ஆனார் என்ற சந்தேகம் அனைவருக்குமே உள்ளது. இந்த விடுதலையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவும் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கின் போது நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை நீங்கள் 35 மார்க் தான் வாங்கி இருக்கிறீர்கள் என்றார். ஆனால் இறுதியில் 35 மார்க் வாங்கிய ஜெயலலிதா எப்படி விடுதலை ஆனார் என்பது தான் தெரியவில்லை. ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய இன்னும் 30, 40 அல்லது 90 நாட்கள் கூட கால அவகாசம் இருக்கிறது. ஆனால், மாற்றத்தை தேடி நீங்கள் 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதாவை ஆட்சியில் அமரவைத்தீர்கள். அந்த ஆட்சி முடிய இன்னும் 1 வருடம் கட்டாயம் நாம் காத்திருக்க வேண்டும்.

இந்த 4 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் அவலத்தை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். சேதுசமுத்திர திட்டத்தை நிறுத்தினார்கள். சொந்த மாநிலத்தில் நடைபெறும் ஒரு நல்ல திட்டத்தை தடை கேட்டு வழக்கு போட்ட ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா தான். தாமிரபரணி இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தோம். அதனை நிறுத்தி விட்டார்கள். ரூ.1,200 கோடி மதிப்பிலான உடன்குடி திட்டத்திற்கு மூடுவிழா செய்து விட்டார்கள். 25 ஆயிரம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகளை முடக்கி விட்டார்கள். மதுரையில் ரூ.100 கோடியில் தமிழன்னைக்கு சிலை என்றார்கள். ஆனால் மதுரை முழுவதும் தேடிப் பார்த்தேன் சிலை இல்லை. அதேபோல் மதுரைக்கு மோனோ ரயில் என்றார்கள். அதற்கான பணிகளை தொடங்கி உள்ளார்களா?
 
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பின்றி உள்ளது. வள்ளுவர் கோட்டம் தூசி படிந்து உள்ளது. செம்மொழி பூங்கா வறட்சி பூங்காவிட்டது. 76 ஆயிரம் கோடிக்கு முதலீடு கொண்டு வரும் முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு இதுவரை 100 கோடி செலவு செய்து விட்டார்கள். ஆனால், அந்த கூட்டம் மூன்று முறை எந்தவித காரணமுமின்றி தள்ளிப்போய் விட்டது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மட்டும் 86 லட்சம் பேர் பதிவு செய்து காத்து கிடக்கின்றனர்.
 
இந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் போராடுகிறார்கள். சத்துணவு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓட்டுமொத்த அரசு ஊழியர்களும் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்று கூறி மின்தட்டுப்பாடு மாநிலமாக மாற்றி விட்டார்கள். மின்சார உற்பத்திக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆட்சிக்கு வந்தால் வீடு கட்ட ரூ.1 லட்சம் மானியம் என்றார்கள் தரவில்லை. ஒரு சென்ட் இடம் என்றார்கள் வழங்கவில்லை. 20 லிட்டர் சுத்தமான குடிநீர் தருவோம் என்றார்கள். ஆனால் 1 லிட்டர் தண்ணீரை ரூ.10க்கு விற்கிறார்கள். இந்தியாவில் குடிநீர் விற்கும் ஒரே அரசு, ஜெயலலிதா தலைமையிலான இந்த அதிமுக அரசு தான்.
 
ஜெயலலிதாவை நம்பிய உங்களை, அவர் நன்றாக ஏமாற்றி விட்டார். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. எனவே இந்த அரசு மீது நீங்கள் கோபப்பட வேண்டும். அநீதிகளை தட்டி கேட்காமல் மவுனமாக இருந்தாலும் குற்றமே. அதனால், மவுனமாக இல்லாமல் தட்டி கேட்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.