வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 5 மார்ச் 2015 (20:18 IST)

தமிழகத்தில்தான் மெகா ஊழல்: பரபரப்பை கிளப்பும் அமித் ஷா

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில்தான் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்று பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷா பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
 
பாஜக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் கோவை சின்னியம்பாளையத்தில் இன்று காலை தொட ங்கியது. மாவட்டத் தலைவர்கள், மண்டல நிர்வாகிகள், முழு நேர ஊழியர்கள் என மூன்று கட்டமாகக்  கூட்டம் நடக்கிறது.
 
முதலில் நடைபெற்ற  மாவட்டத் தலைவர்கள்  ஆலோசனை கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது:-
 
"கடந்த 2014 நவம்பரில் நாடு முழுவதும் பாஜகவுக்கு 10 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 6.2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு விட்டனர். மார்ச் 31 வரை அவகாசம் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 19 லட்சம் பேர்  உறுப்பினராகச் சேர்ந்துள்ளனர். பெரும்பாலான உறுப்பினர்கள் மிஸ்டு கால் மூலம் உறுப்பினராகச்  சேர்ந்தவர்கள்.
 
தமிழகத்தில் பாஜகவை வலிமையானதாக மாற்றப்பட வேண்டியது அவசியம். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில்தான் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது. இதை நாம் முறியடிக்க வேண்டுமானால் பூத் வாரியாக வலிமை பெற வேண்டும். நமது இலக்கை அடைய தேசிய பொதுக்குழுவைக் கூட்டவும்  தயாராக உள்ளோம். தீவிரமாகக்  களப்பணியாற்ற வேண்டும்" என்றார்.
 
பாஜகவுடன் அதிமுக நெருங்கி வருவதாகக் கூறப்பட்ட சூழலில் அமித் ஷா இவ்வாறு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.