வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 3 நவம்பர் 2015 (17:32 IST)

ஏமாற்று வித்தையில் தமிழக அரசு: விஜயகாந்த் குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் பல வழித்தடங்களில் இயக்கப்படுகின்ற பேருந்துகளை நிறுத்திவிட்டு, தீபாவளி சிறப்பு பேருந்துகளாக மாற்று வழியில் இயக்கும் ஏமாற்று வித்தையை தமிழக அரசு செய்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


 


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பண்டிகை காலம் நெருங்கினாலே மக்கள் பாடு திண்டாட்டம்தான். குறிப்பாக வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்ப்பவர்கள் பண்டிகை சமயத்தில் சொந்த ஊருக்கு செல்லும்போது அவர்கள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது.

அதிலும் தீபாவளி சமயத்தில் அனைவருமே அவரவர் வீட்டில் பண்டிகையை கொண்டாடும் ஆசையில் எப்படியாவது தங்களின் ஊர் போய் சேரவேண்டும் என்பதற்காக, போக்குவரத்திற்காக மட்டுமே சில ஆயிரங்களை செலவிடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு வேலை செய்து, சுமார் பத்தாயிரம் ரூபாய் தீபாவளி போனஸாக பெற்று செல்பவர், அரசு பேருந்துகளில் இடமில்லாத காரணத்தினால், தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி, நான்கு பேர், ஐந்துபேர் கொண்ட குழுவாக சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

அதனால் ஒரு நபர் சுமார் மூவாயிரம் ரூபாய் வரை செலவு செய்ய நேரிடுகிறது. அதுபோக மீதி இருக்கும் பணத்தை கொண்டுதான் அவர்களின் குடும்பத் தேவையை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த செலவு அவர்களுக்கு பெரும் சுமையாகவே உள்ளது.

தமிழக அரசு தீபாவளிக்கு 10,300 சிறப்பு பேருந்துகளை இயக்கப்போவதாக அறிவித்துள்ளது. அந்த பேருந்துகளை புதியதாக வாங்கி இயக்கப்போகிறார்களா? இல்லை என்பது தான் உண்மை. ஏற்கனவே தமிழகம் முழுவதும் பல வழித்தடங்களில் இயக்கப்படுகின்ற பேருந்துகளை நிறுத்திவிட்டு, தீபாவளி சிறப்பு பேருந்துகளாக மாற்று வழியில் இயக்கும் ஏமாற்று வித்தையைத் தானே தமிழக அரசு செய்கிறது.

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகளாக அறிவிக்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும், ஏற்கனவே பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டுவந்தன. அந்த வழித்தடத்தில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தமிழக அரசு எந்த பேருந்தை இயக்கப்போகிறது. இதைப் பார்க்கும் போது “இதுதான் அது, அதுதான் இது” என்று சினிமாவில் வரும் வாழைப்பழ காமெடி போல உள்ளது.

பொது மக்கள் நிம்மதியாக குறைந்த செலவில் ஊர்போய்சேர தமிழக அரசு மாற்றுத்திட்டத்தை செயல்படுத்தலாம். தமிழகத்தில் தனியாரின் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. அதன் பயன்பாட்டிற்கு ஆயிரக்கணக்கான பேருந்துகளும், தனியார் பேருந்து நிறுவனத்தின் மாற்று பேருந்துகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவற்றையெல்லாம் தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில், தமிழக அரசே ஒப்பந்த அடிப்படையில் அதை இயக்கினால் பொதுமக்களின் சிரமம் வெகுவாக குறைந்துவிடும்.

இதை செய்வதற்கு, சாத்தியக்கூறு இல்லை என போக்குவரத்துதுறையின் அமைச்சர் மறுப்பாரேயானால், அவருக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறேன். அதிமுக கட்சி நிகழ்சிகளுக்காக, ஆளும்கட்சி என்கின்ற அதிகாரத்தில் இதுபோன்ற பேருந்துகளை கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை இயக்கப்படுகிறது. இது எந்த சட்ட விதிகளின்படி இயக்கபடுகிறதோ, அதே அடிப்படையில் உங்கள் அதிகாரத்தைக்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பேருந்துகளை இயக்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் தீபாவளி காலத்தில் வெளியூர் மக்கள் அனைவரும் ஒரே சமயத்தில் சென்னையை விட்டு வெளியேறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதன் காரணமாக சென்னை கோயம்பேட்டிலிருந்து புறநகர் பகுதியை பேருந்துகளும் மற்றும் பிற வாகனங்களும் கடக்கவே சுமார் 4 மணி நேரம் ஆகிறது. இது அனைவரின் கால நேரத்தையும் விரையமாக்குகிறது.

எனவே இதற்கு மாற்று வழியாக சென்னையின் புறநகர் பகுதிகளான வண்டலூர், பூந்தமல்லி, ரெட்ஹில்ஸ் ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களை உருவாக்கி, வெளியூர் செல்லும் பேருந்துகள் அங்கே இருந்து புறப்படும் வகையில் மாற்று ஏற்பாடு செய்தால் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மக்களின் நலனுக்காக இதை செயல்படுத்த முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.