வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 13 செப்டம்பர் 2014 (09:14 IST)

விவசாயம், பொருளாதார வளர்ச்சிக்குத் தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - வைகோ

தமிழக அரசு விவசாயம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தற்போது மத்திய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு கடைசி இடத்தைப் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

2013, செப்டம்பரில் ரகுராம் ராஜன் குழு அறிக்கையில், தமிழகம் 3.39 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் கூறுகிறது. கடந்த மூன்றாண்டு காலமாக தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டால், விவசாயத்துறை மட்டுமின்றி தொழில்துறையும் பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம் ரூ.1.27 லட்சம் கோடியாகும் இதில் இலவசத் திட்டங்களுக்கு மட்டும் ரூ.250 கோடி செலவழிக்கப்படுகிறது.

இதற்கான நிதி ஆதாரத்தைத் திரட்ட மதுக் கடைகளைத் தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. இதனால் பொருளாதாரம் வளராது.

எனவே விவசாயம், தொழில் துறை, மின்சார உற்பத்தி, சேவைத் துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்“ என்று வைகோ தெரிவித்துள்ளார்.