1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 2 ஏப்ரல் 2015 (15:47 IST)

பிரதமரிடம் பொய் சொன்னாரா ஓ.பன்னீர்செல்வம்?: கருணாநிதி கேள்வி

திவாலாகும் நிலை அரசுக்கு ஏற்படாது என்று கூறிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாக கூறியது ஏன்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
நிதிநிலை அறிக்கையில், பொது விவாதத்திற்கு அளிக்க வேண்டிய பதிலை, முதலமைச்சர் விவாதத்தின்போது குறுக்கிட்டு படித்திருக்கிறார். ஆனால் முதலமைச்சரோ, மற்ற சில அமைச்சர்களோ அவையில் பேசும்போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எந்த ஒரு உறுப்பினருக்கும் அதிலே குறுக்கிட அனுமதியில்லை என்ற சர்வாதிகார நிலை தான் தொடர்ந்து நீடித்து வருகிறது.
 
"2015–2016 ஆம் நிதி ஆண்டின் இறுதியில் தமிழக அரசின் மொத்தக் கடன் அளவு 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய். மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீதம் வரை கடன் பெறலாம், ஆனால் நாங்கள் 19.24 சதவீதம் தான் கடன் வாங்கியிருக்கிறோம்" என்று முதலமைச்சர் சமாதானம் கூறுகிறார்.
 
2011–2012 ஆம் ஆண்டில் 19.84 சதவீதமாக இருந்த கடன் அளவு, 2014–2015 ஆம் ஆண்டு இறுதியில் 19.21 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது, கடன் அளவைக் குறைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறான வாதமாகும் என்று பன்னீர்செல்வம் பேரவையில் சொல்லியிருக்கிறார்.
 
அதாவது திமுக ஆட்சியில் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்தது, தற்போது 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய் என்ற அளவுக்கு அந்தக் கடன் உயர்ந்திருக்கிறது. ஆனால் அப்படிச் சொன்னால் உண்மை உலகுக்குத் தெரிந்து விடுமென முதலமைச்சர் பன்னீர்செல்வம் சாமர்த்தியமாகச் சொல்கிறார், சதவிகிதக் கணக்கில் கடன் அளவைக் குறைத்து விட்டோம், கடன் அளவைக் குறைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறான வாதமாகும் என்று பதிலளித்து இருக்கிறார்.
 
இரண்டாவதாகப் பன்னீர்செல்வம் கூறியிருப்பது, 2014–2015 ஆம் ஆண்டுக்கு திருப்பி செலுத்த வேண்டிய வட்டி 14 ஆயிரத்து 755 கோடி ரூபாய். 2015–2016 ஆம் ஆண்டில் திருப்பி செலுத்த வேண்டிய வட்டி 17 ஆயிரத்து 139 கோடி ரூபாய். இது மாநிலத்தின் வருவாய் வரவில் 12.01 சதவீதம்.
 
அம்மா தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்றபோது இந்த அளவு 18.67 சதவீதமாக இருந்ததை, 12.01 சதவீதமாகக் குறைத்து விட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார். கடனைக் குறைத்து விட்டீர்களா என்றால், வருவாய் வரவில் உள்ள சதவிகிதத்தைக் குறைத்து விட்டோம் என்பது பதிலா? பாவம், எப்படியெல்லாம் சதவிகிதக் கணக்கைச் சொல்லி முதலமைச்சர் சமாளித்திருக்கிறார்? கடந்த ஆண்டு திருப்பி செலுத்த வேண்டிய வட்டியின் அளவை விட இந்த ஆண்டு வட்டியின் அளவு 3 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஆனாலும் முதலமைச்சர் அதைச் சமாளிக்க எண்ணுகிறார்.
 
"திவாலாகும் நிலை ஒன்றும் இந்த அரசுக்கு ஒரு போதும் ஏற்படாது" என்று பேரவையில் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இது உண்மையா? அப்படியென்றால் தமிழக முதலமைச்சர், ஓ.பன்னீர்செல்வம், இந்திய பிரதமருக்கு கடந்த டிசம்பரில் எழுதிய கடிதத்தில், "தமிழ்நாடு ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது; தமிழக அரசுக்குக் குறிப்பிட்ட வருவாய் ஆதாரங்கள் மட்டுமே உள்ளதை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, கூடுதலாக எந்தவொரு நிதிச் சுமையையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்வது என்பது மிகக் கடினமானதாகும்" என்று தெரிவித்திருந்தாரே; அது தவறான தகவலா?
 
மேலும் முதலமைச்சர் பன்னீர்செல்வம், 2011–12 ஆம் ஆண்டுக் கணக்குப்படி மாநிலத்தினுடைய சொந்த வரி வருவாய், 59 ஆயிரத்து 517.30 கோடி ரூபாயாக இருந்தது, 2014–2015 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டின்படி 85 ஆயிரத்து 769.27 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
 
2014–2015 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டைக் குறிப்பிட்ட முதலமைச்சர், 2014–2015 ஆம் ஆண்டின் திட்ட மதிப்பீட்டை ஏன் கூறவில்லை? 2014–2015 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டின்படி, மாநில அரசின் சொந்த வரி வருவாயாக குறிப்பிட்டிருப்பது 91 ஆயிரத்து 835.35 கோடி ரூபாய். அந்தத் தொகைதான் திருத்த மதிப்பீட்டில் 85 ஆயிரத்து 772.71 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
 
இதை அப்படியே சொன்னால் சாயம் வெளுத்து விடுமென்று இதை கவனமாக மறைத்து, திருத்த மதிப்பீட்டை மட்டும் முதலமைச்சரிடம் கொடுத்துப் படிக்கச் செய்திருக்கிறார்கள்! அது போலவே 2014–2015 ஆம் ஆண்டுக்கான மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், மாநில அரசின் சொந்த வரி வருவாய் விகிதம் 9.75 சதவீதம் என்பது, 2015–2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின்படி மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், மாநில அரசின் சொந்த வரி வருவாய் விகிதம் 8.74 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பதுதான் உண்மை.
 
வருவாய் பற்றி முதலமைச்சர் கூறிய காரணத்தால் கூறுகிறேன். முத்திரைத் தாள் தீர்வை மற்றும் பதிவு மூலமாக 2014–2015 ல் கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 470.18 கோடி ரூபாய் வருவாய் எதிர்பார்க்கப்பட்டது. இது திருத்த மதிப்பீட்டில் 9 ஆயிரத்து 330 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
 
அது போலவே மோட்டார் வாகன வரி வருவாய் 2014–2015 ஆம் ஆண்டில் 5 ஆயிரத்து 147.14 கோடி ரூபாயாக இருக்குமென்று நிர்ணயித்திருந்தார்கள். இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதுவும் 4 ஆயிரத்து 882.53 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
 
முதலமைச்சர் பன்னீர்செல்வம், பேரவையில் நிதித்துறை அதிகாரிகள் எழுதிக் கொடுத்த நீண்ட அறிக்கையினை சாதுர்யமான பதில் என்றெண்ணி அப்படியே படித்த காரணத்தால், உருவாகியிருக்கும் குழப்பத்தைக் கலைத்து, உண்மை விவரங்களைத் தெரிவித்திட இந்த அறிக்கையினை வெளியிட வேண்டியவனானேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.