வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 22 செப்டம்பர் 2014 (08:32 IST)

தமிழகத்தில் 20 சதவீத காற்றாலைகள் இயங்கவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு

தமிழக மின் வாரியத்தின் செயற்கையான கட்டுப்பாடுகளால் சுமார் 20 சதவீத காற்றாலைகள் இயங்காமல் உள்ளன என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ் சாற்றியுள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
“தமிழகத்திலே மின்பற்றாக் குறை இருக்கும்போது, இந்த மாதம் 9 ஆம் தேதியன்று டெல்லியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தமிழக மின்துறை அமைச்சர் கலந்து கொண்டாரா? என்றால் கலந்து கொள்ளவில்லை.
 
இதைப் பற்றி இன்று வெளிவந்த செய்தியிலே கூட, மத்திய மின் நிலையங்களில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம், தமிழகத்தின் ஒதுக்கீடு குறைந்திருப்பதாகவும், ஆனால் நிரந்தரத் தீர்வுக்கு மின்வாரிய அதிகாரிகள் முயற்சிக்கவில்லை என்றும், டெல்லி மாநாட்டில் தமிழக அமைச்சர் கடந்த 9 ஆம் தேதி கலந்துகொண்டு, இந்தப் பிரச்சினையை எழுப்பியிருந்தால் இதுபோன்ற பிரச்சினைகளை எல்லாம் பேசித்தீர்வு கிடைத் திருக்குமென்றும், ஆனால் அமைச்சர் போகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மூன்றாண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யப் போவதாக ஜெயலலிதா அறிவித்தார். தமிழக அரசு, சூரிய சக்தி மூலம், 2013 ல் 1000 மெகாவாட், 2014 ல் 1000 மெகாவாட், 2015 ல் 1000 மெகாவாட் என்று மூன்றாண்டுகளுக்குள் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் போவதாகப் பேரவையில் சொன்னார்கள்.
 
அறிவிப்பு செய்து இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. தற்போது என்ன நிலை?. 2012 ல் 52 முதலீட்டாளர்களிடம் இருந்து 708 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவெடுத்து, அதை வாங்க மின் வாரிய அதிகாரிகள் 2013 ம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதிக்காக விண்ணப்பிக்கிறார்கள்.
 
சூரிய சக்தி மின்சாரத்தை வாங்குவதற்கான விரிவான கட்டண ஆணையை, கடந்த வெள்ளிக்கிழமைதான் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், சூரிய சக்தி மின் உற்பத்தியாளரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் 7.01 ரூபாய்க்கு வாங்க மின் வாரியத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.
 
ஆனால் இந்த விலை தேசிய அளவில் 9.30 ரூபாய்க்கு மேல் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் நிர்ணயம் செய்துள்ள விலை குறைவு என்று கூறி முதலீட்டாளர்கள், மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் முறையிட முடிவு செய்திருக்கிறார்களாம்.
 
மேலும் ஏற்கனவே மின்வாரியம் 52 முதலீட்டாளர்களிடம் இருந்து 708 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய அனுமதி கோரியிருந்தார்கள் அல்லவா; அந்த அனுமதியையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மறுத்ததுடன், அந்த மனுவையும் ரத்து செய்து 15-9-2014 அன்று உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதான் ஜெயலலிதாவின் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தின் சோகமான வரலாறு.
 
சூரிய மின் உற்பத்தியின் கதிதான் இது என்றால், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் கதி என்ன தெரியுமா?. தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்று கடந்த மே மாதத்திலே தொடங்கியதால், காற்றாலை மின் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 2,500 மெகாவாட்டாக உள்ளது. காற்றாலைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 3,400 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
 
தமிழக மின் வாரியத்தின் செயற்கையான கட்டுப்பாடுகளால் சுமார் 20 சதவீதக் காற்றாலைகள் இயங்காமல் உள்ளன. ஒரு யூனிட் மின்சாரம் தற்போது ரூ.3.39-வுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
 
இந்நிலையில், சில ஆண்டுகளாக அரசு கடைப்பிடித்து வரும் விதிமுறைகளால் ஓரிரு காற்றாலைகளை இயக்கி வரும் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்கள். இவர்களின் பிரதிநிதிகளை அழைத்து அரசு பேச வேண்டும்.
 
தற்போது இவர்களின் ஆலைகள் இயங்காமல் உள்ளன. மேலும் காற்றாலை நிறுவனங்கள் மின்சாரத்தை அரசுக்கு விற்றுவிட்டு, பணத்தைப் பெறுவதற்காக மாதக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கின்றன.
 
ஆனால் முதலமைச்சர் இத்தனையையும் மறைத்துவிட்டு யாரோ எழுதிக் கொடுத்த ஏமாற்றுப் புள்ளி விவரங்களை கோவையில் படித்துவிட்டு வந்திருக்கிறார்.
 
மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதைப் போல, ஒருசில அதிகாரிகள் முதலமைச்சரிடம் தவறான விவரங்களை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.“ இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.