வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 25 மார்ச் 2015 (13:55 IST)

சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பி.எஸ். ஜெயலலிதா பற்றி பேசிய புகழுரை

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கும் முன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி பேசிய புகழுரை வருமாறு:-



 
 
“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்(கு) இயல்பு” (குறள் 382)

- என்ற வள்ளுவப் பெருந்தகையின் இந்த பொய்யாமொழிக்கு இலக்கணமாய், மன உறுதி, கொடை, அறிவு, ஊக்கம் எனப்படும் அரசருக்குரிய நான்கு பண்புகளுக்கும் உறைவிடமாய்த் திகழும் தமிழகத்தின் விடிவெள்ளி, ஏழைகளின் ஏந்தல், தமிழகத்தின் தன்னிகரில்லாத் தலைவி, தனது அப்பழுக்கற்ற செயலாற்றலால் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள எங்களின் எழுச்சிமிகு புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் நல்லாசியுடன், 2015-2016 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இப்பேரவையின் முன் வைக்க விழைகிறேன். தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்த அரசின் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் அரிய வாய்ப்பினை அளித்தமைக்காக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
 
கடந்த மூன்றரை ஆண்டுகளில் எங்கள் தன்னிகரில்லாத் தலைவியின் ஆற்றல் மிகுந்த தலைமையின் கீழ், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பல வியத்தகு சாதனைகளைப் படைத்துள்ளது. காவேரி நடுவர்மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் இடம்பெறச் செய்தது; முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வகையில் சாதகமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றத்தில் பெற்றது; மாநிலத்தின் மின் உற்பத்தித் திறனைப் பெருக்கி, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்தி, மின்சக்தித் துறையில் காணப்பட்ட மின்தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளியைக் குறைத்தது; என வரலாற்றில் நீங்கா இடம்பெறக்கூடிய இத்தகைய பல துணிச்சலான நடவடிக்கைகளை மதிநுட்பம் மிகுந்த எங்களின் தன்னிகரில்லாத் தலைவி மக்களின் முதல்வர், புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களால் மட்டுமே செயலாக்கி வெற்றி கண்டிட முடியும். உயர் பொருளாதார வளர்ச்சியை அடைந்து மக்களுக்கு அதிக வளம் சேர்த்திடும் வகையில், தமிழ்நாட்டை ஒரு முன்னணி மாநிலமாக மாற்றிடும் உயர்ந்த நோக்கத்துடன் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வெளியிடப்பட்ட தொலைநோக்குத் திட்டம் 2023 ஒரு முன்னோக்கு முயற்சியாக வரலாற்றில் நிச்சயம் நிலைபெறும்.
 
இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.