வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2016 (11:23 IST)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மார்ச் 1 இல் அறிவிப்பு?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மார்ச் 1 இல் அறிவிப்பு?

மார்ச் 1-ஆம் தேதி தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, பிப்ரவரி 10-ஆம் தேதி சென்னை வருகிறது.
 
தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மத்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே துவங்கி விட்டது.
 
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், ஆர்டிஓ-க்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, தற்போது தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
 
தமிழக தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி தலைமையில் இதுவரை 24 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை, 3 கட்டங்களாக நடந்து முடிவடைந்துள்ளது.
 
திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 5 ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது.
 
அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்தால் அவர்களை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
 
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் அதே நேரம் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளதால், தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
 
அந்த வகையில் தமிழகத்தில் எந்த தேதியில் சட்டமன்றப் பொதுத்தேர்தலை நடத்தலாம், எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்த மத்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையிலான 3 பேர் குழு, பிப்ரவரி 10 மற்றும் 11 தேதிகளில் சென்னை வர உள்ளனர்.
 
9ஆம் தேதி புதுச்சேரி செல்லும் மத்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள், அதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு வருகின்றனர். இங்கு நடத்தப்படும் விரிவான ஆலோசனையைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
 
அநேகமாக மார்ச் 1இல் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி அறிவிக்கப்படும் பட்சத்தில், அன்றே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.