வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 29 மார்ச் 2015 (15:24 IST)

பன்றி காய்ச்சல் நோயின் அறிகுறிகள் என்ன?: அதிகாரி விளக்கம்

பன்றி காய்ச்சல் நோயின் அறிகுறிகள் என்ன? என்பது குறித்து நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.
 
நாகை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்து டாக்டர்களுக்கான மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
 
பயிற்சியில் கிண்டி கிங்ஸ் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் டாக்டர் கவிதா அருணகிரி கூறியதாவது:-
 
பன்றி காய்ச்சல் வைரஸ் கிருமி நமது நாட்டில் பரவியது 2009-ல் கண்டுபிடிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமி 2011-ல் கண்டுபிடிக்கப்பட்டது. பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கையாளும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட வேண்டும். பன்றி காய்ச்சல் என்பது இன்புளுயன்சா (H1N1) ஆர்த்தோமிக்சோவிரிடே வகையை சேர்ந்த உயிர்கொல்லி நோயாகும். பன்றிகளிடமிருந்து இந்த நோய் மனிதனுக்கு பரவுகிறது. மேற்கத்திய நாடுகளான மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பன்றி காய்ச்சல் முதலில் தோன்றியது. வட அமெரிக்காவில் வேகமாக பன்றி காய்ச்சல் பரவி வருகிறது.
 
74 நாடுகளில் இந்நோயினால் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. தற்போது இந்த நோய் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு பருவகால சளிக்காய்ச்சலின் அறிகுறிகள் இருக்கும். காய்ச்சல், விறைப்பு, இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி, களைப்பு, பலவீனம், குறிப்பாக உடல் சூடாதல், தசைவலி, தொண்டை புண், வயிற்று போக்கு, வாந்தி போன்றவைகள் இருக்கும்.
 
இந்த நோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும் போது துணியால் முகத்தை மூடி கொள்வது போன்றவை இந்த நோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் ஆகும்.
 
இவ்வாறு டாக்டர் கவிதா அருணகிரி கூறினார்.