வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 29 ஜூன் 2016 (16:02 IST)

சுவாதியை பற்றி அவரது சகோதரி நித்யா பரபரப்பு கடிதம்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி சுவாதி என்ற இளம்பெண் மர்ம நபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


 
 
கொலை செய்தவனை காவல் துறை தீவிரமாக தேடி வரும் வேளையில், சுவாதி குறித்து யூகத்தின் அடிப்படையில் அவரது நடத்தையை பற்றிய தகவல்களும் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படுகிறது. இந்த செயல் சுவாதியின் குடும்பத்தினரிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் சுவாதி எப்படிப்பட்டவர் என்பதை அவரது மூத்த சகோதரி நித்யா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். சுவாதி பற்றி யூகத்தின் அடிப்படையில் பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுகிறது. அவளது மூத்த சகோதரி என்ற முறையில் சுவாதி பற்றிய சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 
சுவாதி மிகவும் குழந்தை தனமான குணம் கொண்டவள். மென்மையாகவே பேசுவாள். கடவுளுக்கு பயந்து நடப்பாள்.
 
சுந்தரகாண்டம், பஞ்சாங்கம் படிக்காமல் மற்றும் அர்ச்சதை தூவி கொள்ளாமல் அவள் ஒரு நாள் கூட வீட்டை விட்டு வெளியில் காலடி எடுத்து வைத்ததில்லை. தினமும் ரெயிலில் வேலைக்கு செல்லும் போது விஷ்ணு சகஸ்ரநாமம் உச்சரித்தபடியே தான் செல்வாள்.
 
சுவாதி வேலைக்கு செல்லும் வழியில் உள்ள சிங்க பெருமாள் கோவிலில் மறக்காமல் நரசிம்மர் ஆலயத்துக்கு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தாள். மேலும், திருமளிகையில் உள்ள எங்கள் ஆச்சாரியர் முதலியாண்டான் சுவாமிகள் ஆலயத்துக்கும் அவள் செல்வதுண்டு. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது அவள் சூளைமேட்டில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலுக்கு செல்லாமல் வருவதே கிடையாது.
 
ஸ்ரீரங்கத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்த நாங்கள் ஐயங்கார் பாரம்பரிய மதிப்புகள் வழிபாடுகளில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள். எங்கள் குடும்பம் அடிக்கடி சுற்றுலாக்களுக்கு செல்லும் போது ஆங்குள்ள கோயில்களுக்கு மறக்காமல் செல்வோம். கடைசியாக நான் என் தங்கையுடன் மசினக்குடியில் உள்ள ஆலயத்திற்கு சென்று இருந்தோம். அங்குள்ள இயற்கை காட்சிகளை சுவாதி ரசித்து சந்தோஷப்பட்டாள்.
 
இயற்கையை மிகவும் விரும்பும் சுவாதி சில தடவை மலையேற்றத்துக்கும் அவள் சென்று வந்துள்ளாள். சுவாதிக்கு எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் நெருக்கமாக பழகுவால். அவளுக்கு நண்பர்கள் வட்டாரம் பெரிதாக கிடையாது. தேவையில்லாத செயல்களில் ஈடுபடமாட்டாள்.
 
நான் கூறிய இத்தகைய பண்புகளுடன் வளர்ந்த சுவாதியை பற்றி பலவிதமாக கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. எனவே அவளை பற்றிய எந்தவிதமான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம். அது இந்த வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
 
சமூக வலைத்தளங்களில் சுவாதி பற்றி வெளியிடுவதற்கு பதில் அவளுக்காக பிராத்தனை செய்யுங்கள். இது போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடைபெறக்கூடாது என்பதே எங்கள் அனைவரது வேண்டுகோள். துரதிர்ஷ்டவசமாக கொலை செய்யப்பட்ட எனது தங்கையின் குணத்தை பாதிக்கும் வகையில் நாம் யாரும் தேவையில்லாமல் செயல்பட வேண்டாம்.
 
சுவாதியை யாரும் காப்பாற்ற முன் வரததற்கான காரணாம் தெரியவில்லை. அதை மறந்து விடுவோம். இனியாவது இது போன்று நடக்கும் போது அதை தடுத்து நிறுத்த நாம் அனைவரும் முன்வர வேண்டும். மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மட்டுமல்ல பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
 
நம்மையும், மற்றவர்களையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்கலாம். சுவாதியின் கொலை சம்பவம் இந்த வி‌ஷயத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன், சென்னையை நேசிக்கிறேன், ஜெய் ஹிந்த்.
 
என சுவாதியின் தங்கை நித்யா கூறியுள்ளார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது.