வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 2 ஜூலை 2016 (12:11 IST)

காதலிக்க மறுத்ததால் சுவாதியை கொன்றேன்: கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியை கொலை செய்த ராம்குமார் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.


 
 
நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த இவர் காவல் துறை கைது செய்ய வருவதை அறிந்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டு சென்றனர்.
 
ராம்குமாருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்த பின்னர் ராம்குமார் பேச ஆரம்பித்ததாகவும், காவல் துறை அவரிடம் பேச்சு கொடுத்து வாக்குமூலம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
 
ராம்குமார் தனது வாக்குமூலத்தில், நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பை முழுமையாக முடிக்காமல் சென்னை சூளைமேட்டில் தங்கி இருந்து ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும், அப்போதுதான் சுவாதியுடன் அறிமுகம் கிடைத்து கடந்த 4 மாதமாக பழகி வந்ததாக கூறினார்.
 
மேலும், தான் வேலைக்கு நடந்து செல்லும் போது சுவாதியுடன் பேச ஆரம்பித்ததாகவும், தன்னை பொறியியல் பட்டதாரி என அறிமுகம் செய்துகொண்ட ராம்குமார் நாளடவில் சுவாதியை காதலிக்க ஆரம்பித்ததாகவும் கூறினார்.
 
நான், பொறியியல் படிப்பை முடிக்காததும், ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருவதும் தெரிந்த சுவாதி என்னிடம் பேசுவதை தவிர்த்தார். இந்நிலையில் என்னுடைய காதலை சுவாதியிடம் கூறினேன். சுவாதி என்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளாமல் என்னை சந்திப்பதையும் தவிர்த்தார்.
 
பின்னர் வேலைக்கு ரயில் நிலையத்துக்கு வரும்போது அவரது தந்தையுடன் வர ஆரம்பித்தார். இதனால் சுவாதியை சந்திக்க என்னால் முடியவில்லை. பின்னர் 2 முறை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை சந்தித்து எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி அவரிடம் கெஞ்சினேன்.
 
ஆனால் எனது காதலை ஏற்றுக்கொள்ளாத சுவாதி, உனக்கும் எனக்கும் எந்தவித பொருத்தமும் இல்லை என திட்டி எனது காதலை நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்து சுவாதியை கொல்ல திட்டமிட்டு இரண்டு நாட்களாக பின் தொடர்ந்தேன்.
 
இறுதியாக கடந்த 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை சந்தித்து எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி மீண்டும் கெஞ்சினேன். ஆனால் அவள் அப்பொழுதும் எனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுவாதியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினேன் என ராம்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் ராம்குமாரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. ஆனல் அவர் அந்த கேள்விக்கு பதில் ஏதும் சொல்லவில்லை.