ரூ.50 லட்சத்திற்காக நில அளவையாளர் காருடன் எரித்துக் கொலை


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 28 மே 2016 (12:55 IST)
சேலம் அருகே, 50 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட நில அளவையாளர் காருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
 
 
இன்று அதிகாலை 4 மணி அளவில் சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி கே.என்.புதூர் அருகே சாலையோரத்தில் ஒரு கார் எரிந்து கொண்டு இருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
மேலும், காரில் இருந்த ஒருவர் தீக்காயங்களுடன் தப்பி ஓடிய நபர் ஒருவரையும் பொது மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 
அவரிடம் நடத்திய விசாரணையில் ஓசூர் நகராட்சி நில அளவையாளர் குவளைச்செழியனை ரூ. 50 லட்சம் கேட்டு கடத்தி வந்து காருடன் எரித்துக் கொன்றது தெரிய வந்தது. இவருடன் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் குவளைசெழியனை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டபோது காரில் கடத்தி சென்றுள்ளனர்.
 
பின்னர், இரவு முழுவதும் காரிலேயே சுற்றியுள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை பொம்மிடி வழியாக ஓமலூர் நோக்கி வந்தபோது மழை பெய்ததால் சாலையில் காரின் சக்கரம் சிக்கிக் கொண்டது. இதனால் பயந்துபோன கும்பல் குவளைசெழியனை காருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றனர்.
 
பொது மக்கள் வருவதை அறிந்ததும், மற்ற 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். காவல் துறையினரிடம் சிக்கியவர் மீது தீக்காயம் பட்டதால் தப்பி செல்ல முடியாமல் சிக்கியுள்ளார்.
 
கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள் என்று பிடிபட்டவரிடம் காவல் துறையினர் விசாரணை நடந்து வருகின்றனர். பிணமாக கிடந்த குவளை செழியன் உடலை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :