வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 21 அக்டோபர் 2014 (19:53 IST)

'பாரத ரத்னா'வை இழிவுபடுத்தும் சுப்பிரமணியசாமி: தா.பாண்டியன் கண்டனம்

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கோரியிருப்பது, 'பாரத ரத்னா' விருதை இழிவுபடுத்தும் செயல் என்று தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் எனக் கோரியிருப்பது, அவரது நெடுங்கால, நிலைத்த தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டுகிறது.
 
தமிழ் மக்களைக் கொன்று குவித்த குற்றத்திற்காக போர் விதி மீறல்களை மீறிய - மனித உரிமைகளை நசுக்கிய காரணங்களுக்காக போர்க் குற்றவாளி என விசாரிக்கப்பட வேண்டிய கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளவருக்கு 'பாரத ரத்னா' பட்டம் வழங்கக் கேட்பது, இதுவரை பாரத ரத்னா பட்டம் பெற்ற அனைவரையும் இழிவுபடுத்துவதாகும்.
 
இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித வாழ்வுரிமைகளைப் பறிக்கவும், இனத்தைக் கொன்றழிக்கத் தூண்டும் குற்றத்திற்காகவும் இந்திய அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், பாமக நிறுவனர் ராமதாஸும், இந்தப் பிதற்றல்களைக் கேட்ட பிறகும் பாஜகவுடன் உறவு பற்றிப் பேசுவதை நிறுத்தி, ஈழத்தமிழ் மக்களின், இந்தியத் தமிழக மீனவர்களுக்கும் அடிப்படை வாழ்வுரிமைகளைப் பெற்றுத்தர, தமிழ் எதிரிக் கூட்டத்திலிருந்து விலகி, தமிழ் மக்களைத் திரட்ட முன்வர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகிறோம்" என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.