1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2016 (11:13 IST)

தொண்டு நிறுவன பெண்களுக்கு தினமும் பாலியல் தொல்லை - உதவி ஆய்வாளர் நிரந்தர நீக்கம்

சென்னையில் உள்ள தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்களுக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்துவந்த காவல்துறை உதவி ஆய்வாளர் நிரந்தர நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
சென்னை விருகம்பாக்கத்தை அடுத்த அபிராமி நகர் பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த தொண்டு நிறுவனம் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும், வசதி படைத்த முதியவர்களுக்கு, அவர்களது இல்லத்திற்கே சென்று மருத்துவ சிகிச்சை கொடுக்கும் பணியை செய்து வந்தது.
 
செவிலியர் படித்த ஏராளமான பெண்கள் இந்த பணியை செய்வதற்காக அந்த தொண்டு நிறுவனத்தில் தங்கி இருந்தனர்.
 
இந்நிலையில், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் குமரேசன், காவலர் ராஜா ஆகிய இருவரும் அந்த தொண்டு நிறுவனத்திற்கு தினமும் குடிபோதையில் சென்று, அங்கு பணியாற்றும் பெண்களிடம், பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர்.
 
மேலும், அந்த தொண்டு நிறுவனத்தில் விபசாரம் நடப்பதாக பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, அங்கு சோதனை போடுவது போல சென்று குமரேசனும், ராஜாவும் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
 
இது தொடர்பாக குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் சார்பில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி அன்று உயர் காவல் அதிகாரிகளிடம் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டது.
 
இந்த புகார் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சிறப்பு உதவி ஆய்வாளர் குமரேசன், காவலர் ராஜா ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானது என்று நிரூபணமானது. இதனைய்டுத்து குமரேசன், ராஜா ஆகிய இருவரும் நிரந்தர பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்யப்பட்டனர்.