1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : புதன், 7 அக்டோபர் 2015 (12:18 IST)

நெற்றியில் பட்டை நாமம் அணிந்து போராட்டம் நடத்திய மாணவர்கள்

ஆண்டிப்பட்டி அருகே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு கடந்த கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை என்று வகுப்புகளை புறக்கணித்து நெற்றியில் பட்டை நாமம் அணிந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


 

ஆண்டிப்பட்டி தேனி மெயின் ரோட்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக அரசு கலைக்கல்லூரி  ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு கடந்த கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை என்று அக்கல்லூரியின் மாணவ,மாணவிகள் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளனர்.
 
கடந்த மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது தேனி கல்வி அதிகாரிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் கண்டிப்பாக கல்வி உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
 
ஆனால் கல்வி அதிகாரிகள் உறுதியளித்தபடி, இன்று வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த,மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, நெற்றில் பட்டை நாமம் அணிந்து  இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட இக்கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்டனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் ஆண்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் நல்லு, சப்–இன்ஸ்பெக்டர் ஈஸ்வர பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து மாணவர்களிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மாணவர்கள் சமரசம் அடையாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.