வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 16 ஜூலை 2016 (12:49 IST)

சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததால் மாணவர் தற்கொலை முயற்சி: 5 பேர் கைது

சேலம் வைஷியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வரும் கோகுல்ராஜ் என்ற மாணவரை கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததால் அந்த மாணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுதொடர்பாக, 4 மாணவர்கள், விடுதிக் காப்பாளர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 
 
தருமபுரி மாவட்டம், பொம்மனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.கோகுல்ராஜ். சேலத்தில் உள்ள வைஷியா கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியுள்ள இவரை சீனியர் மாணவர்கள் சிலர் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடக் கூறி, ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதனால் மன உளைச்சல் அடைந்த கோகுல்ராஜ், கல்லூரியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த மாணவர் கோகுல்ராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
 
தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று மாணவர் கோகுல்ராஜிடம் விசாரித்தனர். ராகிங் செய்ததாக எம்.அலெக்சாண்டர், எஸ்.பூபதி, எஸ்.பாலாஜி, டி.அஜித்கரண் ஆகிய நான்கு பேரையும், விடுதியில் போதிய கண்காணிப்புப் பணி மேற்கொள்ளாத விடுதிக் காப்பாளர் கிருஷ்ணமூர்த்தியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.