வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2015 (14:10 IST)

ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுச்சாம்...

ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுச்சாம்...இப்படி கதைக்கேட்டு வளர்ந்தவர்கள் நாம். ஆனால், இன்று கதைசொல்ல தாத்தா, பாட்டிகளும் இல்லை. குழந்தைகள் கேட்பதற்கு நாம் நேரமும் கொடுப்பதில்லை. ஸ்கூல், ட்யூசன், ஹிந்தி கிளாஸ், டான்ஸ், ட்ராயிங் கிளாஸ், பாட்டு கிளாஸ்... ஷ்ஷ்... யப்பா... பிள்ளைகளைச் சுதந்திரமாகச் சிந்திக்க விட்டால்தானே யோசிக்க முடியும்? உடனே, அதுக்காக ஸ்பெஷல் கிளாஸ் ஏதாவது இருக்கிறதா என்று தேடாதீர்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கதை சொல்லுங்கள்.


 

இன்றைக்கு ஏகப்பட்ட கதைகள் வீடியோக்களாகக் கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும் நீங்கள் நேரில் கதை சொல்லும் உணர்வை அவை தரவே தராது. கதைகள் கற்பனையை, சிந்தனையை வளர்க்கும்; அறிவுத்திறனைப் பெருக்கும். உதாரணமாக, ‘ஒரு வீட்ல ஒரு பேய் இருந்துச்சாம்...’ என்று நீங்கள் கதை சொல்லும்போது, ஒவ்வொருவருக்கும் பேயைப் பற்றிய கற்பனை வேறுவிதமாக இருக்கும். இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால்... சிலருக்கு ‘காஞ்சனா’ பேயும், சிலருக்கு ‘மாயா’ பேயும் நினைவில் தோன்றலாம். இதுதான் சிந்தனையை வளர்க்கும் வழி.

எல்லாம் சரி... கதைக்கு எங்கே போவது? கதையை எப்படிச் சொல்வது? என்று கேட்கிறீர்களா? உங்களுக்காகவே களம் அமைத்துத் தருகிறது ‘ஃபர்ஸ்ட் ஸ்டெப்’ நிறுவனம். ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு ஞாயிற்றுக்கிழமை மாலை, ‘ஒரே ஒரு ஊர்ல...’ என்ற நிகழ்வை இம்மாதம் முதல் நடத்த இருக்கிறது. ஆரம்பத்தில் சென்னை மெரினா கடற்கரையிலும், பிறகு பள்ளிகள், குடியிருப்புகளிலும் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இந்த நிகழ்வில் பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகள், குழந்தைகள், கதை கேட்பதில் ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். கதைசொல்லிகள், நிறைய கதைகளை உங்களுக்குச் சொல்வதோடு, எப்படிக் கதை சொல்ல வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குவர். உங்களுக்குத் தெரிந்த கதைகளையும் சொல்லலாம். நிகழ்வில் பங்குபெறும் குழந்தைகளுக்கு, ‘சுனாமிகா’ பொம்மை பரிசாக வழங்கப்படும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை.

இம்மாத நிகழ்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11ம் தேதி) மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடக்க இருக்கிறது. இடம்: விவேகானந்தர் இல்லம் எதிரில், மெரினா கடற்கரை. தொடர்புக்கு: காவேரி மாணிக்கம், 9042513565