1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 24 ஜனவரி 2015 (18:06 IST)

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: திருச்சி கமிஷனரை இடமாற்றம் செய்ய வைத்த டிராபிக் ராமசாமி

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை கவனித்து வந்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ், அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே, ஆளும்கட்சிக்கு சாதகமாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வந்தன.
 
இந்நிலையில், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவை தேர்தல் ஆணையம் அதிரடியாக இன்று இடமாற்றம் செய்துள்ளது. சைலேஷ் குமார், மதுரை மாநகர காவல்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த சஞ்சய் மாத்தூர், திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக டிராபிக் ராமசாமி நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருச்சியில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்த முக்கியமான அரசு அதிகாரிகளை ஏற்கனவே மாற்றியுள்ளனர். ஆனால் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தொடர்ந்து இருக்கிறார். இவர் தொடர்ந்து இங்கு பணியாற்றினால் இந்த இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடக்காது. அவர் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்.
 
ஸ்ரீரங்கத்தில் தமிழக அமைச்சர்கள் முகாமிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதிக்காமல் சட்டத்துக்குப் புறம்பாக செயல்படுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொன்னால், எடுக்க மறுக்கிறார். எனக்கு பாதுகாப்பு வழங்க கோரியதற்கு மறுத்துவிட்டார். அவரை 48 மணி நேரத்தில் பணியிடமாற்றம் செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன்" என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில், டிராபிக் ராமசாமி கூறியபடி 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே திருச்சி காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் அதிரடியாக பணியிடம் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.