வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 28 ஜனவரி 2015 (07:52 IST)

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க புதிய திட்டம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க புதிய திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
 
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் பணபலம், படை பலத்தை பயன்படுத்துவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
இப்பணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிக்குமார், பொதுப் பார்வையாளர் பல்கார் சிங், செலவுக்கணக்கு பார்வையாளர் ஸ்ரீதர தோரா, காவல் பார்வையாளர் பினோத் குமார், தேர்தலை நடத்தும் அதிகாரி மனோகரன், 32 மண்டல குழுக்கள், 10 பறக்கும் படைகள் ஆகியோர் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
 
மேலும், பொதுமக்கள் புகார் தெரிவிக்க 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியைப் பயன்படுத்தலாம். தேர்தல் ஆணையத்தின் ஆண்டிராய்டு ஆப், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகார்களை தெரிவிக்கலாம். தொலைபேசியில் தகவல் அளிக்கலாம்.
 
அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையம் மீது சொல்லும் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாது.
 
எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டாவிற்கு வாக்களிப்பதற்கான பொத்தான், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கடைசியில் இருக்கும்.
 
தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரையில் ஓட்டுப்போட பணம் வாங்குவதும், பணம் கொடுப்பதும் தவறு என்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.
 
அத்துடன் வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்க புதிய திட்டம் ஒன்றை தேர்தல் ஆணையம் வரும் 31ஆம் தேதி அறிவிக்க உள்ளது. இதன் மூலம் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவு நடக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.