செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 28 ஜனவரி 2015 (10:57 IST)

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: இன்று 46 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை

46 பேர் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
 
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது.
 
முதல் தினமான 19 ஆம் தேதி அதிமுக வேட்பாளர் வளர்மதி ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
 
திமுக வேட்பாளர் ஆனந்த், சோழன் நகரில் உள்ள ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதே அலுவலகத்தில் பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம் கடந்த 24 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
 
இந்நிலையில், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் என்பதால் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகமும், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகமும் பரபரப்புடன் காணப்பட்டது.
 
நேற்று மதியம் 12 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் அண்ணாதுரை தனது வேட்பு மனுவை ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக வீரமுத்து மனுத்தாக்கல் செய்தார்.
 
மேலும் பல சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 25 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். இதேபோல் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 8 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
 
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 46 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
 
அவர்களது விவரம் வருமாறு:-
 
வளர்மதி (அதிமுக)
கோவிந்தன் (அதிமுக மாற்று)
ஆனந்த் (திமுக)
கதிர்வேல் (திமுக மாற்று)
சுப்பிரமணியம் (பாஜக)
பார்த்தீபன் (பாஜக மாற்று)
அண்ணாதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி)
வீரமுத்து (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்று)
ஹேமநாதன் (ஐக்கிய ஜனதா தளம்)
 
மேலும் 37 சுயேச்சை வேட்பாளர்கள்.
 
மொத்தம் 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வி.மனோகரன் தெரிவித்துள்ளார்.
 
இன்று (28.01.2015) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். அப்போது வேட்பு மனு படிவத்துடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத, தகுதியற்ற வேட்பாளர்களின் விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்படும்.
 
அதே நேரத்தில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்பும் வேட்பாளர்களும் தங்களது மனுக்களை இன்று முதல் 30 ஆம் தேதி வரை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
 
30 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வேட்பாளர்களுக்குரிய சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறம் என்பது குறிப்பிடத்தக்கது.