வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 31 ஜனவரி 2015 (13:29 IST)

அகதிகளை கட்டாயாப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக்கூடாது: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

விருப்பத்திற்கு மாறாக யாரையும் கட்டாயாப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது குறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாக்களித்த காரணத்தினால்தான் அவர்கள் வெற்றிபெற முடிந்தது என்பதை நினைவு கூற விரும்புகிறேன். இலங்கை அரசு உடனடியாக இலங்கைவாழ் தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பல்வேறு நல்ல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.
 
இலங்கை பிரதமர் 13 ஆவது அரசியல் சாசன சட்டத்தை நிறைவேற்றுவேன் என்று சமீபத்தில் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் அந்த சட்டத்தை எழுத்திலும், செயலிலும், நிறைவேற்றி அதன் மூலம் சிங்கள மக்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து உரிமைகளும், அங்கீகாரமும் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மனித உரிமை மீறல் தொடர்பாக பாரபட்சமின்றி, வெளிப்படையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்க வேண்டும்.
 
தமிழகத்தில் 100 க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பி சென்று உரிய பாதுகாப்புடன் வாழ்வதற்கும், தங்களது வாழ்வாதாரத்திற்கு உறுதியளித்தல், தங்களது பூர்வீக பகுதிகளுக்கு சென்று குடியிருக்க வீடு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
 
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளிடம் அவர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்புவது தொடர்பாக கருத்து கேட்க வேண்டும். அவர்களது விருப்பத்திற்கு மாறாக யாரையும் கட்டாயாப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்பது பெரும்பாலான தமிழர்களின் எண்ணமாகும். ஒரு நல்ல முடிவு ஏற்படும் வரை தமிழகத்தில் உள்ள முகாம்களில் அவர்கள் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும்.
 
எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசோடு இணக்கமாக பேச்சுவார்த்தை நடத்தி, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தாய் நாட்டிற்கு மீண்டும் செல்வது தொடர்பாக உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் சுமூகமான முடிவுகளை தமிழ் மக்கள் நலன் கருதி எடுக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.