வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2015 (14:09 IST)

இலங்கைக்கு ஆயுத உதவிகளை வழங்கக் கூடாது: ராமதாஸ்

இலங்கைக்கு ஆயுத உதவிகளை இந்தியா வழங்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுகாக் 5 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். 
 
இலங்கையில் அந்நாட்டு போர்ப்படை அதிகாரிகள், பாதுகாப்புத்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்து இந்திய போர்ப்படைத் தளபதி பேச்சு நடத்தவிருக்கிறார்.
 
இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானங்கள் பழையதாகிவிட்ட நிலையில் அவற்றுக்கு பதிலாக புதிய போர் விமானங்களை வழங்குவது, டாங்கிகள், விமானங்களை சுட்டு வீழ்த்தும் டாங்கிகள் ஆகியவற்றை இலங்கைக்கு வழங்குவது ஆகியவைதான் இந்திய ராணுவத் தளபதி தல்பீர் சிங் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் ஆகும்.
 
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவான இலங்கைக்கு அண்டை நாடுகளிடம் இருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை.
 
அத்தகைய நாட்டுக்கு ஆயுதங்களை இந்திய அரசு வழங்குவது எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை இந்திய அரசு உணர வேண்டும்.
 
இலங்கையில் போர் முடிவடைந்து 6 ஆண்டுகளாகி விட்ட நிலையில் அங்குள்ள தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படவில்லை.
 
தமிழர்களை நிரந்தர எதிரியாக கருதும் சிங்கள பேரினவாத அரசு, "இலங்கையில் இரண்டாம் தர குடிமக்களாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அழிய நேரிடும்" என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்து வருகிறது.
 
அப்படிப்பட்ட அரசுக்கு போர் விமானங்கள், நவீன டாங்கிகள் ஆகியவற்றை வழங்குவது தமிழர்களை அழிப்பதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்படும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
 
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் வழி தவறி சென்றால் கூட அவர்களை மன்னிக்க முடியாமல் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தும் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்குவது தமிழக மக்களை சிறுமைப்படுத்தும் செயலாகும்.
 
எனவே, இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிடுவதுடன், இலங்கைக்கு இனி எந்த காலத்திலும் ஆயுத மற்றும் ராணுவ உதவிகளை இந்தியா வழங்காது என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.