வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (07:33 IST)

அமெரிக்காவின் துரோகத்தை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்: ராமதாஸ்

இலங்கை போர்க்குற்ற விசாரணையில், அமெரிக்காவின் துரோகத்தை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவையில்லை. உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
 
ஈழத்தமிழர்களுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கையில் அந்நாட்டு தலைவர்கள் பலரை சந்தித்துப் பேசிய பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
இந்த துரோகத்தை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இப்போதைய நிலையில் ஈழத் தமிழர்களின் ஒரே நம்பிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையமும், அதன் ஆணையர் சையத் அல் ஹூசைனும் மட்டும் தான்.
 
இலங்கை போர்க்குற்றங்கள் பற்றி ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்தின் சார்பில் நடத்தப்பட்ட பன்னாட்டு விசாரணை அறிக்கையில் பட்டியலிடப்படும் குற்றங்களின் அடிப்படையில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டிக்கப்படுவதையும் ஐ.நா.மனித உரிமை ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என்று பசுமைத்தாயகம் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.
 
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்டத்திலும் இக்கோரிக்கையை பசுமைத்தாயகம் வலியுறுத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.