வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 18 அக்டோபர் 2014 (12:40 IST)

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து உதயகுமார் திடீர் விலகல்

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து உதயகுமார் திடீரென விலகியுள்ளார்.
 
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் அவருடன் ஒருங்கிணைந்து பணியாற்றிய மை.பா.ஜேசுராஜ், புஷ்பராயன் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். ஆம் ஆத்மி கட்சி சார்பில் கன்னியாகுமரியில் உதயகுமார், நெல்லை மை.பா.ஜேசுராஜ், தூத்துக்குடியில் புஷ்பராயன் ஆகியோர் துடைப்பம் சின்னத்தில் போட்டியிட்டு அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
 
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாக உதயகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ''போராட்டக் குழுவினர், மீனவ கிராம மக்கள், சமுதாய தலைவர்களுடன் கலந்தாலோசித்து ஆம் ஆத்மி கட்சியில் சில நிபந்தனைகளுடன் இணைந்தோம்.
 
ஆனால், தமிழக மக்களின் உணர்வுகள், தமிழக அரசியல் நிலைப்பாடு, அணு உலைக்கு எதிரான கொள்கை தொடர்பாக கட்சித் தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஹிந்தி பேசும் 9 பேருக்கு மட்டுமே அங்கு பிரதிநிதித்துவம் இருந்து வந்தது. இதனை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நேரிலும், கடிதம் மூலமும் பலமுறை தெரிவித்தும் பலன் இல்லை.
 
இந்தியாவின் அணுசக்தி கொள்கை பற்றி ஒரு தெளிவான வெளிப்படையான நிலையை அவர்கள் எடுக்கவில்லை. தமிழக நிலைமைகளை அறியாமலும், தெரிந்து கொள்ள விரும்பாதவர்களாகவும் கட்சியின் டெல்லி தலைவர்கள் உள்ளனர். தமிழர் பிரச்னைகளை உண்மையாக உணர்வு பூர்வமாக அணுகாத ஒரு கட்சி தமிழகத்தில் காலூன்ற உதவிய வரலாற்று பிழையையும் நான் செய்ய விரும்பவில்லை.
 
அரசியல்வாதி ஆக வேண்டும் என்பதோ, தலைவராக வேண்டும் என்பதோ எனது நோக்கம் இல்லை. எனவே, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுகிறேன். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை அண்மையில் நேரில் சந்தித்து தெரிவித்துவிட்டேன்" என்றார்.