பூஜை செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றி கொலை செய்த மந்திரவாதி


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 25 அக்டோபர் 2016 (14:22 IST)
தூத்துக்குடியில் மந்திரவாதி ஒருவர், பெண்ணிடம் பூஜை செய்வதாக கூறி கொலை செய்த சம்பவம் தற்போது காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
 
 
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள வாழவல்லானைச் சேர்ந்தவர் திருமால். இவரது மனைவி தனலட்சுமி (42). தனலட்சுமி தனது 2 மகன்களின் வேலை தொடர்பாக முத்துகிருஷ்ணாபுரம் கருப்பசாமி கோயில் பூசாரியான மந்திரவாதி சோமசுந்தரத்திடம் குறி கேட்க சென்றுள்ளார்.
 
அப்போது, தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனால், தனலட்சுமி கணவரிடம் திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி கும்பிட செல்வதாக கூறி விட்டு அடிக்கடி அவரை தனலட்சுமி சந்தித்துள்ளார்.
 
மேலும், மந்திரவாதி சோமசுந்தரம் பூஜை செய்ய தேவைப்படுவதாகக் கூறி தனலட்சுமியிடம் இருந்து தாலி செயின் உள்ளிட்ட நகைகள், பணத்தை உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார். தொடர்ந்து தன்னிடம் நகை, பொருட்களை பிடுங்குவதை அறிந்துகொண்ட தனலட்சுமி கொடுத்தவற்றை திரும்ப கேட்டுள்ளார்.
 
இதனையடுத்து 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணம், நகையை கேட்டு தனலட்சுமி தகராறு செய்யவே அவரை, கோயிலுக்கு வரவழைத்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
 
அவரது கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பி தோட்டத்துக்குள் ஓடயுள்ளார். அப்போது, தைக்காவூரைச் சேர்ந்த மற்றொரு மந்திரவாதி அருள்குமாருடன் சேர்ந்து தலையில் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்று தோட்டத்தில் புதைத்துள்ளனர்.
 
தனது மனைவி மாயமானதை அடுத்து அவரது கணவர் திருமால் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். 2 வருடமாக காவல் துறையினருக்கு தண்ணீர் காட்டிவந்த சோமசுந்தரம் நேற்று முன்தினம் இரவு சிக்கினார். அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :