வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : திங்கள், 21 ஜூலை 2014 (13:51 IST)

டிராக்டர் ஏற்றி, தலைமைக் காவலர் கொலை - ஜெயலலிதா ரூ.10 லட்சம் நிவாரணம்

மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றபோது, டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்ட தக்கோலம் தலைமைக் காவலர் கனகராஜ் குடும்பத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா, பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். 
 
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், தக்கோலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த கனகராஜ், 20.7.2014 அன்று தக்கோலம் ஆற்றில் மணல் கடத்துவதைத் தடுக்கச் சென்ற போது, அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த தக்கோலம் பேரூராட்சி 6ஆவது வார்டு தே.மு.தி.க. கவுன்சிலர் திருமதி செண்பகவல்லி என்பவரின் மகன் டிராக்டர் ஓட்டுநர் சுரேஷ் என்பவரை டிராக்டரிலிருந்து கீழே இறக்க முற்பட்டுள்ளார். அப்போது, டிராக்டர் ஓட்டுநர், தலைமைக் காவலர் கனகராஜைக் கீழே தள்ளி, டிராக்டரை இயக்கிய போது, கனகராஜ் டிராக்டரில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும் மன வேதனையும் அடைந்தேன். 
 
கடமை உணர்வுடன் பணியாற்றும் போது தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த தலைமைக் காவலர் கனகராஜ் அவர்களின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். 
 
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் கனகராஜ் அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். 
 
இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.