வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2015 (23:20 IST)

சிவகாசி பட்டாசு விற்பனை சரிவுக்கு மத்திய அரசே காரணம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு

சிவகாசியில் பட்டாசு விற்பனை கடும் சரிவுக்கு மத்திய அரசே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
 

 
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இந்தியாவில் விற்பனையாகும் 80 சதவிகித பட்டாசுகளை உற்பத்தி செய்து குட்டி ஜப்பான் என்று சிவகாசி அழைக்கப்படுகிறது. ஆனால், இன்று அந்த சிவகாசி நகரம் மிகப்பெரிய சோதனையை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
 
கடந்த இரண்டு வருடங்களாக பட்டாசு விற்பனையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருகிறது. மற்ற நாட்களில் தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டிலேயே முடங்கி கிடகக் வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
 
மூன்று வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்ட 90 சதவிகித உற்பத்தியில் இன்றைக்கு 50 சதவிகிதம் கூட செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.
 
இதற்கு காரணம் சீனாவில் உற்பத்தியாகும் தரம் குறைந்த, நச்சுத்தன்மை மிக்க, ஆபத்தான பட்டாசுகள் இந்தியாவில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதுதுதான்.
 
கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 285 மெட்ரிக் டன் சீன பட்டாசுகள் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை பறிமுதல் செய்துள்ளது.
 

இனி, சீன பட்டாசுகள் இந்தியாவில் நுழைவதை அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய பிறகு தான்,  சீனப்பட்டாசுகள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.
 
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசியில் பட்டாசு வர்த்தகம் 5 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, இன்றைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்தது ஏன்? இதற்கு மத்திய பாஜக அரசு தான் காரணம்.
 
பட்டாசு உற்பத்தியில் தன்னிகரில்லாத அளவுக்கு தனித்தன்மையோடு உற்பத்தி செய்துவந்த சிவகாசி இன்றைக்கு சோக வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது.
 
தீபஒளி இருக்க வேண்டிய தீபாவளி திருநாளின் போது இருள் சூழ்ந்த தீபாவளியை கொண்டாட வேண்டிய அவலம் சிவகாசி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 
இந்த அவலத்திலிருந்து சிவகாசி பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு பாஜக அரசு தவறுமேயானால் அதற்குரிய பாடத்தை விரைவில் அவர்கள் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.