வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2015 (07:36 IST)

சிவாஜி கணேசன் சிலையை அகற்றக்கூடாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தற்போது உள்ள இடத்தில் இருந்து சிவாஜி கணேசன் சிலையை அகற்றக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
 
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையில் தங்கி இருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். அதன்படி காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
 
அப்போது இது குறித்து அவர் கூறியதாவது:–
 
சென்னையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அகற்றி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
ஆனால் தற்போது உள்ள இடத்தில் இருந்து சிவாஜி கணேசன் சிலையை அகற்றக்கூடாது. அதற்கு பதிலாக சிவாஜியின் வேறு தோற்றத்தில் சிலை அமைத்து அதனை மணிமண்டபத்தில் வைக்க வேண்டும்.
 
நீதிமன்ற உத்தரவு என்பது இறுதி தீர்ப்பு அல்ல. எனவே தமிழக அரசு சிவாஜி சிலையை அகற்றாமல் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவாஜி மன்றம் சார்பிலும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
 
முதலமைச்சர் ஜெயலலிதா நினைத்தால் அதே இடத்தில் சிலை இருக்கும். கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை அதிமுக அரசு முடக்கியது போல சிவாஜி கணேசன் சிலையை அகற்றுவதில் முனைப்பு காட்டக்கூடாது.
 
திமுக ஆட்சியின்போது மக்களின் வரிப்பணத்தில் தான் சிவாஜி சிலை வைக்கப்பட்டுள்ளது. எனவே முதலமைச்சர் சிவாஜி சிலையை அதே இடத்தில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.