வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 25 ஜூலை 2016 (20:29 IST)

கருணாநிதியை பெயர் சொல்லி அழைப்பதா? - கொந்தளித்த திமுகவினர்

சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதியை, கருணாநிதி என்று அதிமுக உறுப்பினர் குறிப்பிட்டதை அடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
 

 
பட்ஜெட் மீதான பொது விவாதம் சட்டசபையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் நரசிம்மன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை குறிப்பிட்டு பேசினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
உடனே சபாநாயகர் குறுக்கிட்டு, “திமுக. உறுப்பினரின் பெயரை மாண்புமிகு கருணாநிதி என்று மரியாதையுடன்தான் குறிப்பிட்டார். இதில் தவறேதும் இல்லை” என்றார்.
 
உடனே துரைமுருகன் எழுந்து, “முதலமைச்சர் பெயரை நாங்கள் குறிப்பிட்டு பேசலாமா?” என்றார். உடனே அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று துரைமுருகனுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இதனால், சிறிது நேரம் கூச்சல் ஏற்பட்டது.
 
பின்னர் பதிலளித்த சபாநாயகர், ”சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை மரியாதையுடன் குறிப்பிடுவதில் தவறில்லை. ஆனால் முதலமைச்சரை பெயர் சொல்லி குறிப்பிடக்கூடாது. முதலமைச்சர் என்று மட்டும்தான் கூற வேண்டும் என்று ஏற்கனவே நான் கூறி இருக்கிறேன். அதைத்தான் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்” என்றார்.
 
அப்போது பேசிய, மு.க.ஸ்டாலின், ”சபையில் முதலமைச்சர் பெயரை குறிப்பிடக்கூடாது என்று சபாநாயகர் கூறுகிறார். அப்படி எந்த விதியும் கிடையாது. முன்னாள் முதலமைச்சரை மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறி பின் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.